சென்னை மாநகரின் பழமையான நீர்வழிகளில் ஒன்றான 224 ஆண்டுகள் பழமையான பக்கிங்ஹாம் கால்வாயை மீண்டும் புத்துயிர் பெறச் செய்து, அதில் படகு போக்குவரத்து, சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை மேம்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக, நேப்பியர் பாலம் முதல் அடையாறு ஆறு வரையிலான 7.2 கிலோமீட்டர் நீளமுள்ள மத்திய பக்கிங்ஹாம் கால்வாய் பகுதியை ரூ.876.35 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய நீர்வழிப் பாதை 4-ன் கீழ் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டம், சென்னையின் நீர்வழிப் போக்குவரத்துக்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் தொடங்கும் படகு போக்குவரத்து

திட்டம் செயல்படுத்தப்பட்டால், பக்கிங்ஹாம் கால்வாயில் பயணிகள் படகு சேவை மீண்டும் பயன்பாட்டுக்கு வர உள்ளது. முதற்கட்டமாக தலா 20 பயணிகள் பயணிக்கும் வகையில் 8 மின்சாரப் படகுகளை இயக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஒரு பயணிக்கு சுமார் ரூ.50 கட்டணம் வசூலிக்க வாய்ப்புள்ளதாகத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு புதிய போக்குவரத்து வசதி மட்டுமின்றி, சென்னையின் முக்கிய சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு அனுபவமாகவும் இந்த நீர்வழி மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படகு சேவையுடன், கால்வாயில் இரண்டு மிதக்கும் உணவகங்களையும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.2.36 கோடி வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கால்வாயின் இருபுறங்களிலும் தொடர்ச்சியான நடைபாதைகள், வாகன நிறுத்துமிடங்கள், வணிக வளாகங்கள், அலையாத்தித் தாவரங்களின் சீரமைப்பு மற்றும் கூண்டு முறையிலான மீன்வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.

எதிர்காலத்தில் கோவளம், மகாபலிபுரம் வரை விரிவாக்கம்

முதற்கட்டத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், சென்னை சென்ட்ரல் முதல் கோவளம் மற்றும் மகாபலிபுரம் வரையிலான பகுதிகளை இணைக்கும் வகையில் சுமார் 55 கிலோமீட்டர் நீளமுள்ள உள்நாட்டு நீர்வழிப் பாதையாக பக்கிங்ஹாம் கால்வாயை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான திட்ட மதிப்பு சுமார் ரூ.5,500 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை நகரில் நீர்வழிப் போக்குவரத்து மட்டுமின்றி, சுற்றுலா மற்றும் பொருளாதார நடவடிக்கைகளும் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகும்.

கழிவுநீர் கலப்பை தடுப்பது முக்கிய சவால்

பக்கிங்ஹாம் கால்வாயை மீட்டெடுப்பதில் மிகப்பெரிய சவாலாக இருப்பது கழிவுநீர் கலப்பைத் தடுப்பதும், கால்வாயில் பல ஆண்டுகளாக தேங்கியுள்ள வண்டல் மண்ணை அகற்றுவதுமாகும். தற்போதைய நிலையில் தினமும் சுமார் 50 மில்லியன் லிட்டர் கழிவுநீர் கால்வாயில் கலப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் நீரின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், நீரில் கரைந்த ஆக்ஸிஜனின் அளவும் வெகுவாகக் குறைந்துள்ளது.

தமிழ்நாடு நீர்வள முதலீட்டு நிறுவனம் (TWIC) தயாரித்த விரிவான திட்ட அறிக்கையில், செப்டம்பர் 2023 நிலவரப்படி 19 இடங்களில் கழிவுநீர் நேரடியாகக் கால்வாயில் கலப்பது கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, படகு போக்குவரத்தை தொடங்குவதற்கு முன்பு கழிவுநீர் கலப்பை முழுமையாகக் கட்டுப்படுத்துவதும், தேவையான சுத்திகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்குவதும் முக்கிய பணியாக உள்ளது.

புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள்

கழிவுநீர் கால்வாயில் கலப்பதைத் தடுக்கும் வகையில் சுவாமி சிவானந்தா சாலையில் தினமும் 43 மில்லியன் லிட்டர் (MLD) திறன் கொண்ட சுத்திகரிப்பு ஆலையும், கிரீன்வேஸ் சாலையில் 8 MLD திறன் கொண்ட மற்றொரு சுத்திகரிப்பு ஆலையும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கால்வாயில் நேரடியாகக் கழிவுநீர் செல்வது கட்டுப்படுத்தப்பட்டு, நீரின் தரத்தை படிப்படியாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

மேலும், கால்வாயில் தேங்கியுள்ள சுமார் 2.05 லட்சம் கன மீட்டர் வண்டல் மண்ணை அகற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனுடன் 11.6 கிலோமீட்டர் நீளத்திற்கு புதிய வெள்ளத் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட உள்ளன.

வெள்ளப் பாதிப்பைக் குறைக்க ரூ.295 கோடி சிறப்பு கட்டமைப்புகள்

சென்னையில் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளைத் தடுப்பதிலும் பக்கிங்ஹாம் கால்வாய் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக பறக்கும் ரயில் பாதையின் (MRTS) தூண்கள் மற்றும் உயரம் குறைந்த 23 பாலங்கள் நீரின் சீரான ஓட்டத்திற்கு தடையாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதனைச் சமாளிக்க மந்தைவெளி மற்றும் கிரீன்வேஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி வடிகால் பாதைகள் அமைப்பது உள்ளிட்ட சிறப்பு வடிகால் கட்டமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன. இதற்காக சுமார் ரூ.295.58 கோடி செலவிடப்பட உள்ளது. இந்தப் பணிகள் நிறைவடைந்தால், நகரின் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளின் அளவை சுமார் 45 சதவீதம் வரை குறைக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ரூ.77 கோடி வரை வருவாய் ஈட்டத் திட்டம்

பக்கிங்ஹாம் கால்வாயின் மறுசீரமைப்பு வெறும் சுற்றுச்சூழல் மற்றும் போக்குவரத்துத் திட்டமாக மட்டுமின்றி, வருவாய் ஈட்டும் திட்டமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் பராமரிப்புச் செலவு ஆண்டுக்கு சுமார் ரூ.30.44 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை தொழில் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் ஆண்டுக்கு ரூ.49.64 கோடி வருவாய் ஈட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் படகு போக்குவரத்து, மிதக்கும் உணவகங்கள் மற்றும் வணிகக் குத்தகைகள் மூலம் கிடைக்கும் வருவாயையும் சேர்த்து ஆண்டுக்கு மொத்தம் ரூ.77.14 கோடி வரை வருவாய் ஈட்ட முடியும் என திட்ட மதிப்பீட்டில் கணிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article