சீனாவில் சோதனை அடிப்படையில் இயக்கப்பட்ட மேக்லெவ் (Maglev) ரயில், நின்ற நிலையில் இருந்து வெறும் 5.3 விநாடிகளில் மணிக்கு 800 கி.மீ வேகத்தை எட்டி சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்களில் வெளியான தகவலின்படி, ஹூபே மாகாணத்தில் உள்ள டோங்கு ஆய்வகத்தில் 1 கிலோமீட்டர் நீளமுள்ள பாதையில் 1.1 டன் எடையுள்ள இந்த வாகனம் சோதனையை நிறைவு செய்தது. இருப்பினும், இது பயணிகளை ஏற்றிச் செல்ல வடிவமைக்கப்படவில்லை.

விண்வெளி, ராக்கெட்டுகள் மற்றும் பிற அதிவேக அமைப்புகளில் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்களைச் சோதிக்கவே ஆராய்ச்சியாளர்கள் இதைப் பயன்படுத்துகின்றனர்.

எவ்வாறு இயங்குகிறது?

மேக்லெவ் ரயில்கள் காந்த விசையைப் பயன்படுத்தி, தண்டவாளத்தில் இருந்து சற்றே மேலே உயர்ந்து செல்வதால் உராய்வு தவிர்க்கப்படுகிறது. பாதையில் உள்ள சுருள்கள் உருவாக்கும் காந்தப் புலங்கள் வாகனத்தை முன்னோக்கி வேகமாகச் செலுத்துகின்றன.

சமீபத்திய சோதனையில் 800 கி.மீ வேகத்தை எட்டிய இந்த ரயில், அடுத்த 200 மீட்டர் தூரத்திற்குள் பாதுகாப்பாக நிறுத்திச் சோதிக்கப்பட்டது. அதிவேகத்தில் செல்லும் வாகனத்தைப் பாதுகாப்பாக நிறுத்த வேண்டியுள்ளதால் இந்தப் பிரேக்கிங் சோதனை மிக முக்கியமானது.

கடந்த ஜூன் 2025-ல் இதே ரயில் 7 விநாடிகளில் 650 கி.மீ வேகத்தை எட்டி முதல் சாதனையைப் படைத்தது. பின்னர் அது 700 கி.மீ மற்றும் 798 கி.மீ என வேகத்தை அதிகரித்தது. ஒவ்வொரு சோதனையும் அதிக திறன் கொண்ட ஆற்றல் விநியோகம், மின்காந்த உந்துதல், அதிவேக மிதவைக் கட்டுப்பாடு மற்றும் அவசரகால பிரேக்கிங் ஆகியவற்றில் கவனம் செலுத்தியதாக சீனா தெரிவித்துள்ளது.

பயன்பாட்டு ரயில்களின் வேகம்

சீனா மற்றும் ஜப்பானில் தற்போது பயன்பாட்டில் உள்ள வணிக மேக்லெவ் மற்றும் அதிவேக ரயில்கள் மணிக்கு 320 முதல் 350 கி.மீ. வேகத்திலேயே பயணிக்கின்றன. அதேசமயம், சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மேற்கொண்ட மற்றொரு சோதனையில், ஒரு வாகனம் 2 விநாடிகளில் 697 கி.மீ வேகத்தை எட்டியுள்ளது.

ராக்கெட்டுகள், ஏவுதள அமைப்புகளில்..

இந்த சோதனைகள் வியக்கத்தக்கதாக இருந்தாலும், இவை இன்னும் பயணிகள் பயன்பாட்டிற்குத் தயாராகவில்லை. ராக்கெட்டுகள் மற்றும் போர் விமானங்களுக்கான அதிவேக ஏவுதள அமைப்புகளுக்கும், வெற்றிடக் குழாய்கள் வழியே பயணிக்கும் ரயில்களுக்கும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியுமா என ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் ரயில் சாத்தியமா?

புல்லட் ரயிலுக்கான வலிமையான, துல்லியமான நீண்ட பாதைகளை அமைப்பது, மலிவான உள்கட்டமைப்பை உருவாக்குவது, அதிவேகத்தில் பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற பல சவால்கள் இதில் உள்ளன. மேலும், பயணிகள் போக்குவரத்து, பிரேக்கிங் மற்றும் அவசரகால அமைப்புகள் ஆகியவை கடுமையான பாதுகாப்புத் தரங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு சவால்கள் இதில் உள்ளன.

Source: Read Full Article