புதுச்சேரியில் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் மற்றும் பாரதிதாசன் மகளிர் கல்லூரி முழுநேரக் கல்லூரியாக மாற்றப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் உறுதியளித்துள்ளார்.

பாரதிதாசன் சிலைக்கு மரியாதை:

புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில், சென்டாக் (CENTAC) மூலமாக சேர்க்கை பெற்ற மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த சேர்க்கை சான்றிதழ்கள் வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். நிகழ்வின் தொடக்கமாக, கல்லூரியில் அமைந்துள்ள புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் திருவுருவச் சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, கல்லூரியில் புதிதாகச் சேர்ந்த மாணவிகளுக்குச் சேர்க்கை சான்றிதழ்களை நேரில் வழங்கி, அவர்களின் எதிர்காலக் கல்விப் பயணத்திற்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மாணவிகளின் வசதிக்காக அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:

நிகழ்ச்சியில் மேடையில் உரையாற்றிய அமைச்சர் நமச்சிவாயம், கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவிகளின் நலன் சார்ந்த பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்:

முழு நேரக் கல்லூரியாக மாற்றம்: பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்த மாணவிகள் அதிகளவில் பயின்று வருகினறனர். தற்போதைய சூழலில் இடநெருக்கடி மற்றும் தேவைகளைக் கருத்தில் கொண்டு ஷிப்ட் (Shift) முறையில் கல்லூரி இயங்கி வருகிறது. கிராமப்புற மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இக்கல்லூரியை விரைவில் முழு நேரக் கல்லூரியாக மாற்றி இயங்கச் செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அரசு சார்பில் கேண்டீன் வசதி: தற்போது முன்னாள் மாணவர்கள் அமைப்பின் மூலமாக கல்லூரியில் கேண்டீன் (Canteen) இயக்கப்பட்டு வருகிறது. இனிவரும் நாட்களில் இதனை அரசே நேரடியாக ஏற்றுச் சிறப்பாகச் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கல்லூரி மாணவர்களுக்கு இலவசப் பேருந்துகள்: புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வரச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதைப் போல, இனி கல்லூரி மாணவ, மாணவிகளும் சிரமமின்றிப் பயணம் செய்ய விரைவில் இலவசப் பேருந்து சேவைகள் தொடங்கப்படும்.

திரளாகக் கலந்துகொண்ட முக்கியப் பிரமுகர்கள்:

இந்த விழாவில் முத்தியால்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன், சென்டாக் அமைப்பின் உயர் அதிகாரிகள், கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் திரளான மாணவிகள் கலந்துகொண்டனர்.

Source: Read Full Article