ஆரோவில் : வானூர் அருகே உள்ள சர்வதேச ஆன்மீக நகரமான ஆரோவில்லில், மகான் ஸ்ரீ அரவிந்தரின் 154-வது பிறந்த நாள் விழா மற்றும் ‘மோகனம் கிராம பாரம்பரிய மையத்தின்’ 25-வது ஆண்டு வெள்ளி விழா ஆகிய இருபெரும் நிகழ்வுகள் இரண்டு நாட்கள் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டன.

ஆரோவில் (Auroville) என்பது புதுச்சேரிக்கு அருகில், தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சர்வதேசப் பரிசோதனை நகரமாகும். பிப்ரவரி 28, 1968 அன்று 'ஸ்ரீ அன்னை' (Mirra Alfassa) என்பவரால் இது தொடங்கப்பட்டது. மனிதகுல ஒற்றுமையை மெய்ப்பிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

மோகனம் கிராம பாரம்பரிய மையத்தின்’ 25-வது ஆண்டு வெள்ளி விழா

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே சர்வதேச நகரமான ஆரோவில்லில் அமைந்துள்ள மோகனம் கிராம பாரம்பரிய மையத்தில், மகான் ஸ்ரீ அரவிந்தரின் (1872-1950) 154-வது பிறந்த நாள் விழா மற்றும் மோகனம் மையத்தின் 25-வது ஆண்டு வெள்ளி விழா ஆகிய இருபெரும் விழாக்கள் 2 நாட்கள் வெகுவிமர்சையாக நடைபெற்றன.

கண்கவர் ஓவியக் கண்காட்சி

இவ்விழாவையொட்டி "புதிய மனிதத்துவத்தின் தரிசனம் - மனித பரிணாம வளர்ச்சி மற்றும் அதிமன உணர்வு குறித்த ஸ்ரீ அரவிந்தரின் பார்வை" என்ற தலைப்பில் சிறப்புப் பண்பாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் கலை முகாம்கள் நடைபெற்றன. மேலும், மோகனம் கிராம பாரம்பரிய மைய வளாகத்தில் கண்கவர் ஓவியக் கண்காட்சியும், பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறி பார்வையாளர்களைக் கவர்ந்தன.

கடந்த 25 ஆண்டுகாலப் பயணத்தில் மோகனம் மையத்தின் வளர்ச்சிக்குத் தோள்கொடுத்து உறுதுணையாக இருந்தவர்களைக் கௌரவிக்கும் வகையில் "Sharing and Honouring" என்ற பெயரில் சிறப்பு நன்றி நவிலல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மையத்தின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருந்த பல முக்கியப் புள்ளிகள் கௌரவிக்கப்பட்டனர்.

ஆரோவில் அறக்கட்டளையின் தலைமைச் செயலாளர் ஜெயந்தி ரவி ஐ.ஏ.எஸ். தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மோகனம் கலாச்சார நிர்வாகிகள் பாலு, ராஜவேணி மற்றும் குழுவினர் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.இந்த விழாவில் ஆரோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், கலைஞர்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Source: Read Full Article