புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த திருபுவனை தொழிற்பேட்டையில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலை ஆய்வின் போது சர்ச்சை தவெக எம்எல்ஏ சாய் ஜெ.சரவணகுமார் மீது வழக்கு பதிவு, பதிலுக்கு பிசிஆர் செல்லில் புகார்.

புதுச்சேரி அடுத்த திருபுவனை தொழிற்பேட்டையில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலை ஒன்றில் ஆய்வு மேற்கொள்ளச் சென்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்எல்ஏ சாய் ஜெ.சரவணகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அதேவேளையில், தங்களை சாதியைச் சொல்லி தடுத்ததாகக் கூறி தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது எம்எல்ஏவும் பிசிஆர் செல்லில் (PCR Cell) புகார் அளித்துள்ளார்.

தொழிற்சாலை நிர்வாகம் அளித்த புகார்:

திருபுவனை தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலைக்குள் தவெக எம்எல்ஏ சாய் ஜெ.சரவணகுமார் ஆய்வு செய்வதற்காக உள்ளே சென்றுள்ளார். அப்போது தொழிற்சாலை நிர்வாகத்தினர், ஆய்வு செய்ய எதற்காக உள்ளே வருகிறீர்கள் என்று கேள்வி கேட்டு தடுத்துள்ளனர். இதனால் எம்எல்ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்குள்ள அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தொழிற்சாலை நிர்வாகி சிவராமகிருஷ்ணன் திருபுவனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், சாய் ஜெ.சரவணகுமார் எம்எல்ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பட்டியலினத்தவர் என சாதியை குறிப்பிட்டு தொழிற்சாலைக்குள் வரக்கூடாது என தொழிற்சாலை நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்தினர் என்றும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரியும் தவெக எம்எல்ஏ சாய் ஜெ.சரவணன்குமார் இன்று புதுச்சேரி பிசிஆர் செல்லில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், எனது தொகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பட்டியலின தொழிலாளர்களுக்கு சாப்பாடு தட்டில் பாகுபாடு காட்டுவதாகவும், பெண்கள் மற்றும் தொழிலாளர்கள் நசுக்கப்படுவதாகவும், மக்கள் பயன்படுத்தக்கூடிய குளம், கோயில் இடங்கள் நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் பார்வையிட காவல் துறை அதிகாரி, கொம்யூன் அதிகாரி, தொழிற்சாலை நிர்வாக அலுவலர்களிடம் முறைப்படி தெரிவித்து, தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் சென்றேன்.

அப்போது அந்த நிறுவனத்தின் ஹெச்ஆர் மேலாளர் அருண்குமார், சிவசங்கர், காவலர்கள் மற்றும் பெயர் தெரியாதவர்கள் 30 பேர் என்னை உள்ளே வரக்கூடாது என்று தடுத்தனர். தொகுதி எம்எல்ஏ உள்ளே வரக் கூடாதா என்று கேட்டதற்கு என்னையும், எனது உதவியாளர் நான்கு பேரையும் பார்த்து நீங்கள் பட்டியலினத்தை சேர்ந்த எம்எல்ஏ நிறுவனத்துக்குள் வரக் கூடாது என்று மீண்டும் தடுத்தனர்.

மேலும் காவலாளி அறையில் அமர வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அங்கிருந்து வெளியே வந்துவிட்டேன். சாதியின் அடிப்படையில் பட்டியலின எம்எல்ஏவை உள்ளே வரக்கூடாது என்று கூறி தடுத்த ஹெச்ஆர் இருவர் மீதும் மற்றும் பெயர் தெரியாத நபர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும்’ என்று அந்தப் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் புதுச்சேரி அரசியல் மற்றும் தொழிற்சாலை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article