இந்திய விமானப்படையின் 'ஸ்குவாட்ரன் லீடர்' பாவநா காந்த், வான் போர் தந்திர பயிற்சி மையம் நடத்தும் மிக உயரிய 'ஃபைட்டர் காம்பாட் லீடர்' (Fighter Combat Leader) எனும் போர் பயிற்சியை முடித்து, நாட்டின் முதல் பெண் விமானப்படை விமானி என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

அமெரிக்க 'டாப் கன்' பயிற்சிக்கு இணையான மையம்

நமது இந்திய விமானப்படையின் தலைமைச் சிறந்த போர் பயிற்சி மையமாக 'டி.ஏ.சி.டி.இ.' (TACDE) எனப்படும் வான் போர் தந்திரம் மற்றும் மேம்பாட்டு பயிற்சி மையம் செயல்படுகிறது. அமெரிக்க கடற்படையின் உலகப் புகழ்பெற்ற 'டாப் கன்' (Top Gun) பயிற்சிக்கு இணையானதாகக் கருதப்படும் இந்த மையத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட போர் விமானிகளுக்கு மட்டுமே மேம்பட்ட வான் போர் தந்திரங்கள், திட்டமிடல் மற்றும் தலைமைப் பண்புகளுக்கான அதிதீவிர பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

20 வார கடின பயிற்சி

மத்திய பிரதேசத்தின் குவாலியரில் அமைந்துள்ள இந்த பயிற்சி மையத்தில், பயிற்சி வகுப்புகள் 20 வாரங்கள் நடைபெறும். மிகவும் கடினமான இந்த உயர்மட்டப் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்ட இந்திய விமானப்படையின் 'ஸ்குவாட்ரன் லீடர்' பாவநா காந்த், அதனை வெற்றிகரமாக நிறைவு செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம், இந்திய விமானப்படை வரலாற்றிலேயே 'ஃபைட்டர் காம்பாட் லீடர்' பயிற்சியை நிறைவு செய்த முதல் பெண் போர் விமானி என்ற பெருமை இவரைச் சென்றுடைந்துள்ளது. இனி இவர் சிக்கலான வான் போர் நடவடிக்கைகளுக்குத் தலைமை வகிப்பார் என்பதுடன், விமானப்படையின் முன்னணி போர் தந்திர நிபுணர்கள் வரிசையிலும் இடம் பிடித்துள்ளார்.

பாவநா காந்தின் பின்னணி

பீஹார் மாநிலத்தின் தர்பங்கா மாவட்டத்தைச் சேர்ந்த பாவநா காந்த், ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார். கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், நமது விமானப்படையின் முதல் பெண் போர் விமானிகள் குழுவில் அவானி சதுர்வேதி மற்றும் மோகனா சிங் ஆகியோருடன் இணைந்து அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். தொடக்கத்தில் 'மிக்-21 பைசன்' (MiG-21 Bison) ரக போர் விமானத்தை இயக்கிய இவர், பின்னர் நாட்டின் அதிநவீன 'சுகோய்-30 மார்க் 1' (Su-30 MKI) போர் விமானத்திற்கு மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article