சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையை 8 வழி சாலையாக தரம் உயர்த்தப்படும் என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம்

சட்டப்பேரவையில் இன்று நெடுஞ்சாலை, பொதுப்பணி, விளையாட்டு மேம்பாடு, மனிதவள மேலாண்மை ஆகிய துறைகளின் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் நெடுஞ்சாலை துறை மீதான கோரிக்கைகளுக்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான நெடுஞ்சாலையை 8 வழிச்சாலைகளாக மாற்ற வேண்டும். ஏனென்றால் ஒரு திட்டம் செயல்படுத்தினால் அடுத்த 40 ஆண்டுகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதால் இதில் பணிச்சுமை, நிதிச்சுமை ஆகியவை அதிகமாக உள்ளது. இருந்தாலும் இந்த திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

4 வழிச்சாலையால் திணறும் மக்கள்

ஒரு காலத்தில் இருவழிச்சாலையாக மட்டுமே இருந்த பல நெடுஞ்சாலைகள் இன்று 4 வழிச்சாலைகளாக தரம் உயர்த்தப்பட்டு விட்டது. அதேசமயம் எதிர்காலத் தேவையை கருத்தில் கொண்டு 4 வழிச்சாலைகள் 6 அல்லது 8 வழிச் சாலைகளாக மாற்ற திட்டமிடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை சுமார் 700 கி.மீ. நீளத்திற்கு விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக தற்போது 4 வழிச்சாலை செயல்பாட்டில் உள்ளது. ஆனால் மக்கள் தொகை, வாகன எண்ணிக்கை காரணமாக மக்கள் வெளியூர் செல்வதற்குள் படாதபாடு பட வேண்டிய சூழல் உள்ளது.

சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு காரில் செல்ல சுமார் 12 முதல் 14 மணி நேரம் வரை ஆகும் நிலையில் இந்த பயண நேரத்தை குறைக்க பல திட்டங்கள் செயல்பாட்டில் இருந்து வருகிறது. நெடுஞ்சாலையில் ஊர்கள் இணையும் இடத்தில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. மக்களுக்கு பயண நேரத்தை குறைக்கும் நோக்கில் பல திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது. அப்படியாக 8 வழிச்சாலைகள் வந்தால் இனி கன்னியாகுமரி 7 முதல் 8 மணி நேரத்தில் செல்ல முடியும்.

திட்டத்தில் உள்ள சவால்கள் என்னென்ன?

தமிழக அரசு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்குப் இந்த 8 வழிச்சாலைகள் தொடர்பாக கோரிக்கை விடுத்துள்ளது. இதன்மூலம் தென்னிந்தியாவின் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும் என திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் 700 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை விரிவாக்கம் என்பது மிகவும் சவாலான விஷயமாகும். சென்னை – திருச்சி – மதுரை – கன்னியாகுமரி வழியை விரிவுப்படுத்துவது அல்லது சென்னை ஈசிஆரில் உள்ள சில பகுதிகளை இணைத்து இந்த திட்டத்தை செயல்படுத்தலாமா என ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டவுடன் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

Source: Read Full Article