தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக, செங்கல்பட்டு மாவட்டம் வி.ஐ.டி., கல்வி நிறுவன பகுதியில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், சென்னை சோழிங்கநல்லூர், ராணிப்பேட்டை பகுதிகளில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது.

இன்றைய வானிலை நிலவரம்

தமிழக கடலோர பகுதிகளில், கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றுசுழற்சி / காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை மழை தொடரும் பகுதிகள்

நாளை கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மற்ற மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

பருவமழை அளவு

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையைப் பொறுத்தவரையில், ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 22 வரையிலான காலகட்டத்தில் 15 செ.மீ. மழை பெய்துள்ளது. இந்த காலகட்டத்தின் இயல்பான மழை அளவு 18 செ.மீ. ஆகும். அதாவது, வழக்கமான இயல்பு அளவை விட தற்போது 17 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source: Read Full Article