தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அரசியல் கூட்டணி மொத்தமாக மாறியுள்ளது. குறிப்பாக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக பலமிகுந்த கூட்டணியாக களமிறங்கிய திமுக இன்று சிதைந்துள்ளது.

தவெக ஒருங்கிணைப்பாளர் யார்?

திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் தவெக பக்கம் தாவிவிட்டனர். இ்ந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளும் தவெக-விற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில், தவெக தலைமையிலான கூட்டணியின் ஆலோசனைக்கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அந்த கூட்டணியின் பெயர் என்ன? மற்றும் ஒருங்கிணைப்பாளர் யார்? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

புகைச்சல்:

இதில் ஒருங்கிணைப்பாளர் பெயருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோரில் இருவரில் ஒருவரை நியமிக்க ஆலோசிக்கப்பட்டது. ஆனால், இதில் இழுபறி நீடித்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை நியமிக்க சிலர் பரிந்துரைத்தனர்.

இந்த விவகாரத்தால் கூட்டணி கட்சியினர் இடையே புகைச்சல் ஏற்பட்டது. விசிக-வினர் திருமா-வை நியமிக்க வேண்டும் என்றும், மதிமுக-வினர் வைகோ-வை நியமிக்க வேண்டும் என்றும், காங்கிரசார் சிதம்பரத்தை ஒருங்கிணைப்பாளராக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருவதால், இந்த விவகாரத்தில் விஜய் முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தலை திமுக-வுடன் இணைந்தே சந்திக்க வேண்டும் என்று திட்டவட்டமாக இருந்த சிதம்பரத்தின் மீது அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தியே அதிருப்தியில் உள்ளார். இதனால், அவரை கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்க விஜய்யும் தயக்கம் காட்டி வருகிறார்.

விஜய் எடுக்கப்போகும் முடிவு:

கூட்டணியின் தலைவராக உள்ள விஜய் எந்த கட்சியினரும் மனம் சங்கடப்படாமல் இருக்கும் வகையில், 3 பேரும் இல்லாத வகையில் வேறு ஒருவரை நியமிக்க ஆலோசித்து வருகிறார். அந்த வகையில் கூட்டணியில் உள்ள மூத்த தலைவரான காதர் மொய்தீன் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராகவும் அவர் இருப்பதாலும், அவருக்கு கூட்டணியில் ஒருங்கிணைப்பாளர் பதவி அளித்தால் சிறுபான்மையினர் மத்தியிலும் விஜய்யின் செல்வாக்கு மேலும் அதிகரிக்கும் என்றும் தவெக தரப்பில் கருதப்படுகிறது.

விரைவில் தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் மற்றும் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் யார்? என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. தவெக கூட்டணியின் முக்கிய தலைவர்களாக உள்ள திருமாவளவனும், வைகோவும் பொதுவெளியில் ஒருவரை ஒருவர் விமர்சித்து வருவதும் விஜய்க்கு சற்று மன வருத்தத்தை உண்டாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அடுத்து நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒருவரை ஒருவர் விமர்சிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்த தவெக தலைமை திட்டமிட்டுள்ளது.

Source: Read Full Article