IND Vs ENG 3rd T20: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி கண்டது.

இந்தியா - இங்கிலாந்து 3வது டி20:

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான மூன்றவாது போட்டி ட்ரெண்ட் ப்ரிட்ஜில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அடித்து ஆடிய இங்கிலாந்து:

இங்கிலாந்து சார்பில் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்களான அதிரடியாக ஆடி ஆரம்பம் முதலே ரன் குவித்தனர். பட்லர் 36 ரன்களில் ஆட்டமிழக்க, பில் சால்ட் அரைசதம் கடந்து 70 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய சாம் கரன் 24 பந்துகளில் 41 ரன்களை குவித்தார். இதன் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பில் ஹர்ஷித் ராணா மற்றும் ப்ரின்ஸ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

சீட்டுகட்டாய் சரிந்த இந்திய அணி

202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, ஆரம்பமே பெரும் இடியாய் அமைந்தது. அபிஷேக் சர்மா 10 ரன்களில் ஆட்டமிழக்க, சூர்யவன்ஷி மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் தலா 13 ரன்களில் நடையை கட்டினர். அக்‌ஷர் படேல் 10 ரன்களில் பெவிலியன் திரும்ப, கேப்டன் ஸ்ரேயாஸ் உள்ளிட்ட மற்ற அனைவருமே ஒற்றை இலக்குகளில் விக்கெட்டைகளை தாரைவார்த்தனர். இதனால் வெறும் 11.4 ஓவர்கள் முடிவிலேயே 76 ரன்களை சேர்ப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி தோல்வியுற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.

20 ஆண்டுகளில் இல்லாத தோல்வி

76 ரன்களுக்கு ஆட்டமிழந்ததன் மூலம், 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி வாய்ப்பை இழந்தது. கடந்த 2006ம் ஆண்டு டி20 சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தொடங்கியதில் இருந்து, ரன்கள் அடிப்படையில் இந்தியா கண்ட முதல் தோல்வி இதுவாகும். கடந்த 2008ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மெல்போர்னில் நடைபெற்ற போட்டியில், 74 ரன்களுக்கு ஆட்டமிழந்ததே டி20 போட்டியில் இந்திய அணியின் மிகவும் குறைந்த ஸ்கோராகும்.

இதையும் படியுங்கள்: TN Weather Update: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை

ஸ்ரேயாஸ் மீது குவியும் விமர்சனங்கள்:

ரோகித் சர்மா தொடங்கி சூர்யகுமார் யாதவ் வரையிலான வீரர்கள் கேப்டனாக இருந்த வரையில், கடந்த சில ஆண்டுகளில் ஒரு டி20 தொடரை கூட இந்திய அணி இழக்காமல் இருந்தது. அடுத்தடுத்து 2 உலகக் கோப்பைகளையும் வென்றது. ஆனால் ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டனாக முதல் தொடரிலேயே, அயர்லாந்து அணியிடம் தோல்வியை சந்தித்தார். இப்போது இங்கிலாந்திடமும் அடுத்தடுத்து தோல்விகளை கண்டுள்ளார். இதற்கு அவரது மோசமான பேட்டிங் ஃபார்ம் மட்டுமின்றி, கள முடிவுகளும் காரணமாக கூறப்படுகிறது.

வேகப்பந்து வீச்சாளர் ப்ரின்ஸ் யாதவ் தனது பந்துவீச்சின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி நிலையில், அவரது அடுத்த ஓவர் உடனடியாக நிறுத்தப்பட்டது. 12வது ஓவரில் ஹாட்ரிக் எடுக்கும் நிலையில் இருந்த ஹர்ஷித் ராணா, பந்துவீச்சிலிருந்து நீக்கப்பட்டு 18வது ஓவரில்தான் மீண்டும் வாய்ப்பினை பெற்றார். இந்த தவறான முடிவுகள் இங்கிலாந்து அணி மிகப்பெரிய ஸ்கோரை எடுக்க உதவியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

Source: Read Full Article