கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசுப்பணி வழங்குவதற்கு பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.

கரூர் துயர சம்பவம் - அரசு வேலை

கடந்த 2025ம் ஆண்டு தவெக தலைவராக இருந்த இப்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய் தேர்தல் பரப்புரைக்காக கரூர் மாவட்டத்திற்கு செப்டம்பர் 27ம் தேதி சென்றிருந்தார். அவரைக் காண வேலுச்சாமிபுரத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த குறுகலான சாலையில் லட்சக்கணக்கானோர் திரண்டனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சுமார் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தவெக சார்பில் விஜய் நிதியுதவி அறிவித்தார். அந்த குடும்பங்களை எல்லாம் சென்னைக்கு வரவழைத்து ஆறுதல் சொன்னார். ஆனால் அந்த சம்பவத்திற்கு பிறகு கரூர் மாவட்டத்திற்கு செல்லாமல் இருந்தார்.

இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றப் பின் விஜய் முதல்முறையாக கரூர் இன்று செல்கிறார். அதுமட்டுமல்லாமல் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரில் 32 குடும்பங்களுக்கு தகுதிக்கேற்ப அரசுப்பணி வழங்கவுள்ளார். ஆனால் இந்த முடிவுக்கு திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எனினும் முதலமைச்சர் விஜய் தன் முடிவில் உறுதியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஜி.கே.வாசன் ஆதரவு

ஆனால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு கரூர் பொதுக்கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி கொடுப்பதாக முடிவு செய்திருப்பதை அரசியலுக்கு அப்பாற்பட்ட முடிவாகவே பார்க்க வேண்டும்.

கட்சி சார்ந்த பொதுக்கூட்டம், ஏற்பாடுகள், அதில் சாதகம், பாதகம் என்று பார்த்தால் அதற்கு கேள்வி எழும்போது விசாரணையின் மூலம் விடை கிடைக்கும்.இருப்பினும் தமிழகத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தது என்பது இதுவரை நடக்காத ஒரு வேதனையான சோகமான சம்பவம்.இதுபோன்ற மிகத்துயர சம்பவத்தை நாம் மனிதாபிமான நோக்கத்தோடு அணுக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
இனிவரும் காலங்களில் அரசியல் கட்சிகளுக்கு உருவாக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளும், கோட்பாடுகளும், பந்தோபஸ்துகளும் பின்பற்றப்பட வேண்டும்.

அரசியல் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளும் அனைவருக்குமான பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.எனவே கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தமிழக அரசு மனிதநேய அடிப்படையில் கவனத்தில் கொண்டு அரசுப்பணி அறிவித்து உதவிக்கரம் நீட்டுவதை அரசியல் பார்வை இல்லாமல் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) இயக்கத்தின் கருத்தாகும்” என தெரிவித்துள்ளார்.

Also Read: CM Vijay: விஜயை அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ.. மருத்துவமனைக்கு ஓடோடி செல்ல காரணம் இதுவா?

தவெக கூட்டணிக்கு க்ரீன் சிக்னலா?

தமிழ் மாநில காங்கிரஸ் 2026 சட்டமன்ற தேர்தல் வரை தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு அங்கமாக இயங்கி வந்தது. ஆனால் தொடர்ச்சியாக தேர்தலில் அக்கட்சி படுதோல்வி அடைந்த நிலையில் சமீபத்தில் அந்த கூட்டணியை விட்டு விலகுவதாக ஜி.கே.வாசன் அறிவித்தார். இப்படியான நிலையில் முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பதால் தவெக கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் செல்லவுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Source: Read Full Article