முதலமைச்சர் என்ற பொறுப்பை மறந்து விட்டு விஜய் பேசும் பேச்சு அருவருக்கத்தக்க வகையில் இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழாவில் நீண்ட இடைவெளிக்கு பின் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துக் கொண்டார். சட்டமன்ற தேர்தல் படுதோல்விக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைக் கூட புறக்கணித்த ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்த நிலையில் முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சனம் செய்தார்.

விஜயைப் பொறுத்தவரை கரூரில் பேசியது வழக்கமான ஸ்கிரிப்ட் தான். ஒரு முதலமைச்சர் என்றால் ஆட்சித்திறன் வேண்டும். அது எதுவும் விஜயிடம் இல்லை. சினிமாவில் ஒரு காட்சி எப்படி எடுப்பார்களோ அதைப்போல ஸ்டார்ட் என சொன்னதும் கொடுத்த வசனத்தை அப்படியே ஒப்பித்து விட்டார். இடைத்தேர்தலை மனதில் கொண்டு தான் கரூர் பயணம் அமைந்தது. ஆனால் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். தவெக ஆட்சிக்கு வந்தவுடன் வீட்டிற்கு ஒருவருக்கு வேலை தருவோம் என சொன்னீர்களே?.. அது இன்னும் தரவில்லை. காலியாக உள்ள மூன்றரை லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்புவது பற்றி பேசியிருக்கலாம். விவசாயிகள் பிரச்னை பற்றி கூறியிருக்கலாம். ஜூன் மாதத்தில் குறுவை சாகுபடிக்கு காவிரி நீர் திறந்து விடுவதற்கான என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் பற்றி சொல்லியிருக்கலாம்.

அரசு வேலை இன்றைய இளைஞர்களுக்கு கேள்விக்குறியாகி இருக்கும் நிலையில் 32 பேருக்கு அரசுப்பணி வழங்கியுள்ளார். எம்ஜிஆர் 1958ல் இருந்து சம்பாதித்த பணத்தையெல்லாம் வாரி வாரி வழங்கினார். அதனால் தான் அவர் பெயரை இன்றைக்கும் தலைவர்கள் உச்சரிக்கிறார்கள். எனினும் விஜய் சினிமாவில் எவ்வளவு சம்பாதித்திருப்பார். கோடி கோடியாக சம்பாதித்துள்ள நீங்கள் இந்த 32 குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி கொடுத்திருக்கலாம்.

அதை அவர்கள் வங்கியில் போட்டு வட்டி பெற்றால் முன்னுக்கு வர முடியும். ஆனால் அரசு வேலை கொடுத்து டிஎன்பிஎஸ்சி மூலம் படித்துக் கொண்டிருப்பவர்கள் வாய்ப்பை ஏன் பறிக்க வேண்டும்?.. கடைத்தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைத்த கதையாக இருக்கிறது.

Also Read: TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!

அதேபோல் தூயசக்தி அப்படி இப்படின்னு சொன்னாரே.. ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து எங்களுக்கு இல்லை. யாரை உடன் வைத்து விட்டு நீங்கள் அதை பேசுகிறீர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். கிராமத்துல ஒரு பழமொழி சொல்லுவாங்க.. கோழி திருடனை பக்கத்துல வச்சிக்கிட்டு ஊரெல்லாம் தண்டோரா போட்டானாம். அந்த மாதிரி தான் ஊழலை ஒழிக்கணும்னு முதலமைச்சர் விஜய் பேசுறாரு. இன்றைக்கு அவர் பேசும் பேச்சு அருவருக்கத்தக்க வகையிலான எண்ணம் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Source: Read Full Article