படுக்கை அறைக்கு சென்று பாலியல் தொல்லை

சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்த 33 வயது பெண் ஒருவர் , தனது கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். அவர் சென்னை மாநகர காவல் துறையின் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் ஊர்க் காவல் படையில் பணியாற்றி வருகிறார்.

அவரது வீட்டிற்கு எதிரே , அல்தாப் ( வயது 52 ) என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் வீட்டில் தனியாக இருக்கும் நேரங்களை அல்தாப் தொடர்ந்து கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் வீட்டுக்குள் கதவைத் திறந்து நுழைந்த அல்தாப், நேராக படுக்கை அறைக்குள் சென்று அவரது கையைப் பிடித்து இழுத்து பாலியல் அத்து மீறலில் ஈடுபட முயன்றதாக போலீசார் தெரிவித்தனர்.

மிளகாய் பொடியை தூவி பெண்

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் , வீட்டில் வைத்திருந்த மிளகாய்த் தூளை அல்தாப்பின் கண்ணில் தூவியுள்ளார். எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்த அல்தாப் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. பின்னர், நடந்த சம்பவத்தை தனது கணவர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்த அந்த பெண், துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அல்தாப்பை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் , கடந்த இரண்டு நாட்களாக அல்தாப் தொடர்ந்து அந்த பெண்ணைத் தொந்தரவு செய்து வந்தது தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். "உனக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் என்னிடம் கேள்", என் மனைவி என்னை சரியாக கவனிப்பதில்லை என்றும் , " நான் சொல்வது போல் நடந்தால் உனக்கு என்ன வேண்டுமானாலும் செய்து தருகிறேன் " என்றும் கூறி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் , பெண்ணின் செல்போன் எண்ணுக்கு தொடர்ந்து அழைத்து, "வீட்டில் பேசினால் அனைவரும் பார்ப்பார்கள் , வெளியே சென்று பேசலாம்" என்று வற்புறுத்தி வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் நடந்த நாளில், பெண் வீட்டில் தனியாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்ட அல்தாப், வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அவரது கையைப் பிடித்து இழுத்ததுடன், "நான் கேட்ட ட்ரீட்டுக்கு ரெடியா ? என்று கேட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதையடுத்து, அல்தாப் மீது தொடர்புடைய மூன்று சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த துரைப்பாக்கம் போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: Read Full Article