தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைந்தது முதலே ஒவ்வொரு துறையின் ஆய்வுக்கூட்டங்களையும் முதலமைச்சர் விஜய் தொடர்ந்து நடத்தி வருகிறார். பின்னர், அந்தந்த துறைகளில் பல்வேறு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

தமிழ்நாட்டின் அறநிலையத்துறையின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

புதிய விதிகள்:

இந்த சூழலில், தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோயில்களில் புதியதாக கொடிமரம் அமைப்பதற்கு என்னென்ன வழிமுறைகள் என்பதை அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது. அதை கீழே விரிவாக காணலாம்.

1. அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து கோயில்களிலும் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்ய ஆணையர் அனுமதி பெற வேண்டும்.

2. புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்வதற்கு குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்பாக ஆணையரின் அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

3. கொடிமரம் நடப்பட உள்ள கோயில் செயல் அலுவலர், தக்கார், அறங்காவலர் தீர்மானத்துடன் ஆணையர் அனுமதிக்கு முன்மொழி அனுப்பப்பட வேண்டும்.

4. புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு, துறையின் சட்ட விதிகளுக்கும், ஆகம நெறிமுறைகளுக்கும் உட்பட்டு நடக்க வேண்டும்.

5. கோயிலுக்கு புதிய கொடிமரம் உபயதாரரால் வழங்கப்பட்டிருந்தால், அவரது சம்மத கடிதம் இணைக்கப்பட வேண்டும்.

6. புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட பின் செப்பு, பித்தளை, தங்கம், தங்கமுலாம், தங்கமின் முலாம் பூசிய கவசங்களை பொருத்த துறையின் அனுமதி பெற வேண்டும்.

இந்த உத்தரவுகளை அறநிலையத்துறை ஆணையர் வினய் தனது உத்தரவில் பிறப்பித்துள்ளார்.

கடும் நடவடிக்கை:

இதுமட்டுமின்றி அறநிலையத்துறை ஆணையர் பிறப்பித்துள்ள உத்தரவில் தரிசனம் செய்வதற்காக இணையவழி மூலமாக முன்பதிவு செய்யும் பக்தர்களின் விவரங்களை தனி பதிவேடு மூலமாக பராமரிக்க வேண்டும் என்றும், அதில் பக்தர்களின் பெயர், முகவரி, பூஜை செய்யப்படும் நாள் மற்றும் இதர விஷயங்களை தெளிவாக பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், அவரது உத்தரவில் அர்ச்சனை, அபிஷேகம், இதர பூஜைகள் முடிக்கப்பட்டதும், கோயில் திட்டப்படி பக்தர்களுக்கு வழங்க வேண்டிய பிரசாதங்களை உடனடியாக விரைவு கூரியர் மூலமாக அஞ்சல் வழியாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும், இணையவழி மூலமாக தரிசனம் செய்த பக்தர்கள் தங்களுக்கு பிரசாதங்கள் கிடைக்கவில்லை என்ற புகார்கள் கிடைக்கப்பெற்றால் தொடர்புடைய அலுவலர்கள் மீத கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article