சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் சாலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பதிவு செய்யப்படாத வாகனத்தால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியரின் குடும்பத்திற்கு ரூ.97.18 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

விபத்தின் பின்னணி என்ன ?

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் பாலமுத்து முருகன் (33). இவர் சென்னை லயோலா கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 2-ஆம் தேதி, பாலமுத்து முருகன் தனது இருசக்கர வாகனத்தில் கும்மிடிப்பூண்டியில் உள்ள 'விக்கி ஸ்டீல்' நிறுவனத்திற்கு எதிரே உள்ள சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் திடீரென அவர் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பாலமுத்து முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இழப்பீடு கோரி வழக்கு

கல்லூரி பேராசிரியரான பாலமுத்து முருகனின் திடீர் மறைவு அவரது குடும்பத்தினருக்குப் பேரிழப்பாக அமைந்தது. இதனையடுத்து, அவரது இழப்பிற்கு ரூ.53 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி, அவரது மனைவி லிலி மற்றும் குடும்பத்தினர் சார்பில் சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு, சிறு வழக்குகளுக்கான நீதிமன்ற நீதிபதி எம். தர்மபிரபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தனது உத்தரவில், தலையில் ஏற்பட்ட காயம் காரணமாகவே பாலமுத்து முருகன் உயிரிழந்துள்ளார் என்று குறிப்பிட்டதோடு, அவர் தலைக்கவசம் அணியாதது மட்டுமே இந்த விபத்து நிகழ்வதற்குக் காரணமாக அமைந்தது என்று கருத முடியாது என்றும் சுட்டிக்காட்டினார். அதேவேளையில் தலைக்கவசம் அணிந்திருந்தால் காயங்களின் தீவிரத்தைக் குறைத்திருக்க முடியும் என்பதையும் அலட்சியப்படுத்த முடியாது எனத் தெரிவித்தார்.

நீதிமன்ற விசாரணை மற்றும் முக்கிய உத்தரவு

விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகனம் மோட்டார் வாகனச் சட்டப்படி முறைப்படி பதிவு செய்யப்படவில்லை என்பதும், பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 'பாலாஜி ஆட்டோமொபைல் டீலர்' பதிவு செய்யப்படாத அந்த வாகனத்தைச் சாலையில் ஓட்ட அனுமதித்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. தற்காலிக முறையில் கூட அந்த வாகனத்தைப் பதிவு செய்து வழங்காமல் விற்பனையாளர் அலட்சியமாகச் செயல்பட்டுள்ளார்.

இதன் காரணமாக, வாகன டீலர் தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது என்பதால், சம்பந்தப்பட்ட வாகன டீலர் மற்றும் பதிவு செய்யப்படாத வாகனத்தை ஓட்டி வந்த நபர் ஆகிய இருவரும் இணைந்து, உயிரிழந்த பாலமுத்து முருகனின் குடும்பத்திற்கு ரூ.97.18 லட்சம் ரூபாயை, 6.5 சதவீத வட்டியுடன் ஒரு மாதத்திற்குள் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.

Source: Read Full Article