விழுப்புரம் : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்படும் சி.வி.சண்முகம் கோயிலில் சத்தியம் செய்ய தயாரா? என அ.தி.மு.க. கிளியனூர் ஒன்றிய செயலாளர் ஏ.டி.பக்தவச்சலம் சவால் விடுத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலம் அருகே கிளியனூர் ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் ஏ.டி.பக்தவச்சலம் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கழகத்தை பல சோதனையான காலகட்டங்களிலும் கட்டிக்காத்து வழிநடத்தி வரும் தெய்வம் தான் பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்கள். ஆனால் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக வந்துவிடக்கூடாது என்ற துரோக நோக்கத்துடன் சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட சுமார் 25 மாவட்ட செயலாளர்கள் செயல்பட்டுள்ளனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் தங்கள் பினாமிகளுக்கு சீட் வாங்கி கொடுத்து, முறையாக செலவு செய்யாமல் கழக வேட்பாளர்களை தோற்கடித்துள்ளனர். தமிழ்நாட்டில் சுமார் 25 இடங்களில் கழகம் வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு காரணமே சி.வி.சண்முகம் போன்றோரின் துரோகம்தான்.

கழகத்தில் உள்ள அனைவருக்கும் பதவி கொடுத்து சிறப்பிக்க வேண்டும் என்பதற்காகவே மாவட்டங்களை மூன்றாக பிரித்து எடப்பாடியார் நடவடிக்கை எடுத்தார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத சி.வி.சண்முகம், ‘நாங்கள்தான் குறுநில மன்னராக இருக்க வேண்டும், நாங்கள்தான் மந்திரியாக வேண்டும், வேறு யாரும் வரக்கூடாது’ என்ற பேராசையால் கழக பொதுச்செயலாளரையே இகழ்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். தாம் மட்டும் ஜெயித்துவிட்டு, எடப்பாடி அண்ணனை தோற்கடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டார்கள்.

கழகத்துக்கும் எடப்பாடியாருக்கும் துரோகம் செய்யவில்லை என்று சி.வி.சண்முகம் கூறினால், அவர் தனது பிள்ளைகளுடன் கோயிலுக்கு வரட்டும். நானும் என் பிள்ளைகளுடன் வருகிறேன். ‘நான் கட்சிக்கு துரோகம் செய்யவில்லை, கழக வேட்பாளர்களை தோற்கடிக்கவில்லை’ என்று முருகன் கோயிலில் வந்து சத்தியம் செய்ய சி.வி.சண்முகம் தயாரா? என சவால் விடுக்கிறேன்.
சென்ற தேர்தலில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஐயா அவர்கள் நமக்கு சிறப்பாக ஒத்துழைப்பு தந்தார். ஆனால் சி.வி.சண்முகம் எப்பொழுதுமே பா.ம.க. கூட்டணிக்கு வரக்கூடாது என்று தடுப்பவர். உள்ளாட்சி தேர்தலிலும், சட்டசபை தேர்தலிலும் சுயநலத்துடன் செயல்பட்டு கழக வேட்பாளர்களின் வெற்றியை பறித்தவர் அவர்.

நமது பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்கள் ஒரு சாதாரண உறுப்பினராக, கிளை செயலாளராக தொடங்கி, ஒன்றிய பொறுப்பாளர், சேர்மன், எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சராகி இன்று பொதுச்செயலாளராக உயர்ந்தவர். பொறுமையின் கடலாக இருக்கும் அவரை பற்றி பேச சி.வி.சண்முகத்திற்கு எந்த தகுதியும் இல்லை. முன்னாள் முதல்வர் அம்மா அவர்களாலேயே கட்சி விரோத நடவடிக்கைக்காக ஓரங்கட்டப்பட்டவர்தான் இந்த சி.வி.சண்முகம்.

இனியும் எடப்பாடியாரையோ அல்லது கழகத்தால் நியமிக்கப்பட்ட புதிய மாவட்ட செயலாளர் பசுபதியையோ தரக்குறைவாக பேசினால் தொண்டர்களாகிய நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். சி.வி.சண்முகத்தின் பின்னால் செல்லும் நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் நன்றாக சிந்திக்க வேண்டும். இது அண்ணா தி.மு.க., இரட்டை இலை இயக்கம். சி.வி.சண்முகத்தை நம்பி போனால் ஏமாந்துதான் போவீர்கள். நாங்கள் 99 சதவீத தொண்டர்கள் என்றும் எடப்பாடியாரின் பின்னால்தான் உறுதியாக நிற்கிறோம். வரும் காலத்தில் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக அமர்வது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.

Source: Read Full Article