" கிருஷ்ண லீலா நூல் வெளியீடு "

சத்குருவின் பார்வையில் கிருஷ்ணரின் பன்முகப் பரிமாணங்களை விளக்கும் வகையில் உருவான 'கிருஷ்ண லீலா' எனும் புதிய நூல் அறிமுக விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதீய வித்யா பவன் அரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எம். முரளி, அகமதாபாத் வருமான வரித்துறை ஆணையர் கவிதா ராமானுஜம், 'கிருஷ்ண லீலா' நூலை தமிழில் எழுத்தாக்கம் செய்த பிரபல எழுத்தாளர் சுபா, உலகத்தமிழ்ச் சங்கத்தின் இயக்குனரும் பிரபல பேச்சாளருமான முனைவர் பர்வீன் சுல்தானா மற்றும் கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று, நூல் குறித்த தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து சிறப்புரை ஆற்றினர்.

பர்வீன் சுல்தானா பேசுகையில் ;

இந்த 'கிருஷ்ண லீலா' நூலின் மூலமாக வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும், மகிழ்ந்து இருப்பதற்கு இந்த வாழ்க்கையே போதுமானது என நமக்கு உணர்த்துகிறார் சத்குரு. கிருஷ்ணனிடம் எல்லா குணங்களும் இருந்தன. அவன் சூது செய்வான், சூழ்ச்சி செய்வான், ஆடுவான், பாடுவான், மகிழ்ந்திருப்பான்.

அவனிடத்தில் இல்லாத ஒரே ஒரு குணம் 'மெத்தனம்'. 'அதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்' என்று தள்ளிப் போடும் குணம் அவனிடம் இல்லை. ஒவ்வொரு வினாடியும் முழுக்க முழுக்க உணர்வோடும், விழிப்புணர்வோடும் இருந்தவன் கிருஷ்ணன் என்பதை சத்குரு இந்தப் புத்தகத்தில் அழகாக சுட்டி காட்டியிருக்கிறார்.

மேலும் இந்த நூல் கிருஷ்ணனின் மிக முக்கியமான லீலை பெண்களுக்கு மிக அற்புதமான, பாதுகாப்பான ஒரு சூழ்நிலையை அவன் தொடர்ந்து தந்து கொண்டே இருந்தான் என்பதை மிக அழகாகப் பேசுகிறது.

கவிதா ராமானுஜம் பேசுகையில் ;

கிருஷ்ணனை விடவும் ராதைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் அளித்து மக்கள் வழிபடுகிறார்கள் என்ற நீண்ட நாள் கேள்விக்கான விடை , இந்தப் புத்தகத்தை வாசித்த போது எனக்குக் கிடைத்தது. இந்தப் புத்தகம் கிருஷ்ணரை அசாத்திய மந்திர சக்திகள் கொண்டவராகக் காட்டாமல், நம்மைப் போன்ற ஒரு சாதாரண மனிதனாக அவர் எதிர்கொண்ட சவால்களையும், முயற்சிகளையும் மிக இயல்பாக விவரித்துள்ளது.

முன்னதாக எழுத்தாளர் பாலகிருஷ்ணன் பேசுகையில் ;

நாங்கள் சத்குருவிடம் அவருடைய கருத்துக்களையெல்லாம் ஒரு புத்தகத்திலோ அல்லது இதழிலோ பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். அதன் பிறகே 'அத்தனைக்கும் ஆசைப்படு' என்ற தலைப்போடு தொடங்கி, ஐந்து ஆண்டுகள் ஒரு இதழில் அவருடைய கேள்வி-பதில்களையும், அனுபவங்களையும் நாங்கள் தொகுத்து எழுதினோம்.

அந்த தொடர்களை 'உனக்காக ஒரு ரகசியம் , செய் அல்லது செய்யாதே', 'ஆயிரம் ஜன்னல்' என ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு புத்தகமாக வெளியிட்டார்கள். நாங்கள் எழுத்துத் துறையில் நுழைந்ததற்கு ஒரு அர்த்தம் கிடைத்திருக்கிறது என்றால், அதற்கு அந்தப் புத்தகங்களே காரணம்.

கிருஷ்ண லீலா நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு கிடைத்த அதே அனுபவம் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று சத்குரு இதனை புத்தகமாக கொண்டு வர எண்ணினார். அதனை தமிழில் எழுதும் பொறுப்பை எங்களிடம் தந்தார்கள்.

கிருஷ்ணனைப் பற்றி நீங்கள் முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், இந்தப் புத்தகத்தை நிச்சயமாகப் படித்தே தீர வேண்டும். நம் அனைவரையும் கிருஷ்ணனாக மாற்றுவதுதான் இந்த 'கிருஷ்ண லீலா' புத்தகத்தின் நோக்கம். 'நம்மால் கிருஷ்ணனாக மாறிவிட முடியுமா ?' என்று நீங்கள் கேட்டால், 'இந்தப் புத்தகத்தை நீங்கள் படித்துப் பாருங்கள்' எனக் கூறுவேன்

Source: Read Full Article