உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களாக உலா வந்த இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரிய பாடம் எடுத்துள்ளது அயர்லாந்து அணி. அயர்லாந்து அணிக்கு எதிரான 2 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிய இந்திய அணி 2 போட்டியிலும் தோற்றுள்ளது. இது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய கரும்புள்ளியாக கருதப்படுகிறது.

தொடரை இழந்த இந்தியா:

முதல் போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற நிலையில், 2வது போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் தோற்றது. இந்திய அணிக்கு எதிராக ஆடுகிறோம், டி20 சாம்பியன் அணிக்கு எதிராக ஆடுகிறோம், ஐபிஎல் அனுபவம் கொண்ட அதிரடி பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஆடுகிறோம் என்ற எந்த அழுத்தமும் இல்லாமல் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அயர்லாந்து அணி அசத்தியுள்ளது.

பாடம் கற்றுக்கொடுத்த அயர்லாந்து:

இந்த 2 டி20 போட்டிகள் தோல்விக்கு முழுக்க முழுக்க இந்திய அணி சிறப்பாக ஆடாததும், அயர்லாந்து அபாரமாக ஆடியதுமே காரணம். அயர்லாந்து அணிதானே என்று இந்திய அணி அலட்சியமாக ஆடியதன் விளைவுதான் இது என்றும் ரசிகர்களை எண்ண வைத்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட்டில் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானத்தில் 200 ரன்களுக்கு மேல் குவித்து குவித்து ஆட்டம் காட்டி வந்த இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அயர்லாந்து தொடர் சர்வதேச கிரிக்கெட்டும், வெளிநாட்டு மைதானத்தின் தன்மையையும் என்ன என்று நினைவூட்டியதாகவே இது கருதப்படுகிறது.

சொதப்பிய பேட்டிங்:

சாம்சன் இரண்டு போட்டியிலும் சொதப்பினார். அபிஷேக் சர்மா நேற்றைய போட்டியில் டக் அவுட்டானார். ஐபிஎல்-லில் சிக்ஸரும், பவுண்டரியும் விளாசுவது போல அயர்லாந்து மண்ணிலும் விளாசலாம் என்று கருதிய இந்திய அணிக்கு சர்வதேச கிரிக்கெட்டை வேறு மனநிலையில் அணுக வேண்டும் என்பதையும் உணர்த்தியுள்ளது.

சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, ஸ்ரேயஸ் ஐயர், அக்ஷர் படேல், ஷிவம் துபே என பேட்டிங் பட்டாளமே இருந்தும் இந்திய அணியால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. அயர்லாந்து அணியின் தங்களது கூட்டு முயற்சி, ஒத்துழைப்பு, அபாரமான பேட்டிங் மற்றும் பந்துவீச்சால் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றனர்.

வீழ்த்திய ஜெய் முன்றா:

குறிப்பாக, இந்தியாவைப் பூர்வீகமாக கொண்ட ஜெய் முன்றா 2 போட்டியிலும் இந்திய அணியை தனது சுழலால் கட்டுப்படுத்தினார். இந்த தோல்வியை இந்திய அணி ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு இனி வரும் நாட்களில் சிறப்பான ஆட்டத்தையும், எந்த அணியையும் அலட்சியமாக எண்ணாமலும் ஆட வேண்டியதையும் இந்த தொடர் உணர்த்தியுள்ளது.

Source: Read Full Article