சென்னை தலைமைச் செயலகத்தில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு இன்று நடைபெற்றது. இதற்கு தலைமை தாங்கிய முதலமைச்சர் விஜய் இந்த மாநாட்டில் பேசியதாவது,

அடிப்படை வசதிக்கு முக்கிய கவனம்:

வெளிப்படையான, நேர்மையான, இலஞ்ச லாவண்யமற்ற ஒரு சமூக நீதிக்கான அரசைத் தேர்ந்தெடுத்தே ஆக வேண்டும் என்றே நம் மக்கள் முடிவு செய்துதான், நம்முடைய அரசைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். ரேஷன், கல்வி, குடிநீர், சுகாதாரம், மின்சாரம், சாலை வசதி, பேருந்து வசதி போன்ற அடிப்படை வசதிக்கெல்லாம் நாம் முக்கிய கவனம் செலுத்தியாக வேண்டும்.

சட்டம் ஒழுங்கு பிரச்சனையைப் பொறுத்தவரை, நீங்கள் சட்டத்தின் அடிப்படையில் சுதந்திரமாக முடிவு செய்யலாம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு உயர்வானவர்களாக இருந்தாலும், பாரபட்சமின்றி சட்டப்படி உடனடியாக துரிதமாக நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். அதில் நிரபராதிகள் யாரும் தப்பித்தவறி கூட பாதிக்கப்பட்டுவிடக் கூடாது.

வங்கி சேவைகள்:

மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தை நடத்துவதற்கு முன்னால், District Level Officers கூட்டத்தை ஆன்லைனில் நடத்த வேண்டும். விவசாயிகள், மீனவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் கூட்டத்தை முறையாக, சரியாக, கனிவோடு நடத்த வேண்டும். மனு கொடுக்க வருகிற மக்களிடம் கனிவாகக் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுடைய பிரச்சனை என்னவென்பதை புரிந்துகொண்டு உடனடியாக அதற்குரிய நடவடிக்கையை எடுத்துத் தீர்வு தர வேண்டும்.

மக்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு சான்றிதழ், பட்டா போன்ற அடிப்படைத் தேவைகளைக் கேட்டுதான் வருவார்கள். அப்படி வருகின்ற மக்களை, தங்கள் வீட்டில் இருக்கின்ற மனிதர்களாக நடத்தினால் போதும், அவர்கள் சந்தோஷம் அடைவார்கள். மக்களுக்கு வங்கி சேவைகள் ஒழுங்காகக் கிடைக்கிறதா? என்பதை வங்கியாளர்கள் கூட்டத்தை (Bankers Meeting) நடத்தி விசாரிக்க வேண்டும்.

சட்ட நடவடிக்கைகள்:

மேலும், திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை வேளையில் கள ஆய்வுக்குச் (Field Visit) செல்ல வேண்டும். வேலை செய்வது, மனு வாங்குவது மட்டும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களின் வேலையல்ல. தொடர் கண்காணிப்பு (Follow-up) மிகவும் முக்கியம். அதற்காக ஒரு அலுவலரை நியமித்து தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களிடம் குறையைக் கேட்பதைவிட, அதைத் தீர்ப்பது மிகவும் முக்கியம்.

மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் ஒவ்வொரு மாதமும் சட்டம்-ஒழுங்கு கூட்டத்தை நடத்தி, சம்பந்தப்பட்ட துறைகளை ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும். ஒவ்வொரு முக்கியமான வழக்கிலும் சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து, தவறு செய்தவர்கள் தப்பித்துவிடாத வகையில் உடனடியாகத் தீர்வு கிடைப்பதற்கு சட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும்.

கணித்து செயல்பட வேண்டும்:

மாவட்ட ஆட்சியர்கள், வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையோடு கலந்தாலோசித்து, எந்தவொரு சம்பவமும் நடப்பதற்கு முன்னதாகவே மூலகாரணத்தைக் கண்டறிந்து, குற்றச் சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்களின் நடத்தையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். இதற்காக, வருவாய்த்துறை, காவல்துறை அனைத்துத் தகவல்களையும் சேகரித்து, அதைச் சரிபார்த்து, முன்பாகவே என்ன நடக்கும் என்று கணித்து அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும்.

பெண்கள் பாதுகாப்பில் உறுதி:

முக்கியமாகப் பெண்கள் பாதுகாப்பை நூறு சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும். எந்த சமரசமும் இருக்கவே கூடாது. பெண்களின் பாதுகாப்பிற்கு உரிய சிறப்பு ஏற்பாடுகள் செய்தே ஆக வேண்டும். மாவட்ட ஆட்சியர்களும் காவல் கண்காணிப்பாளர்களும் அவற்றின் மீது கூர்மையான மற்றும் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.

குழந்தைகள் பாதுகாப்பு:

மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிலும் முக்கியக் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும் அருகிலுள்ள கடைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும். தேவைப்படும் நேர்வில் அவ்வப்போது அங்கு சோதனை நடத்த வேண்டும். போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோரை உடனடியாகக் கைது செய்து, நீதிமன்றத்தின் முன் நிறுத்தித் தண்டனை வாங்கித் தருவதை உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source: Read Full Article