தமிழகத்தில் குற்ற சம்பவங்கள்

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எதிர்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதிலும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்ற சம்பவங்களும் அரங்கேறி வருவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இதனையடுத்து பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பிற்காக தமிழக அரசு சார்பாக சிங்கப்பெண் அதிரடிப்படை உருவாக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையும் தீவிர கண்காணிப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அரசின் திட்டங்களை செயல்படுத்துவது. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் அவ்வப்போது நடத்தப்படும்.

IAS, IPS அதிகாரிகள் மாநாடு

அந்த வகையில் இன்று மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும் இந்த மாநாட்டில் சட்டம்-ஒழுங்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, பொது சுகாதாரம், போதையில்லா தமிழ்நாடு திட்டம், முதியோர் நலன், சட்டவிரோத கனிம வளக் கொள்ளையைத் தடுப்பது, அனைத்து மதங்களின் வழிபாட்டு நிகழ்வுகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்,பழங்குடியினர் மற்றும் பட்டியலினத்தவர்களின் நலன், அவர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.

தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள்

இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாக ஒவ்வொரு மாவட்ட ஆட்சியருடனும் முதலமைச்சர் விஜய் தனித்தனியாக ஆலோசனை நடத்தவுள்ளார். அப்போது தங்கள் மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகள், சரி செய்ய எடுக்கப்பட்ட வழிமுறைகள் தொடர்பாக முதலமைச்சரின் கனவத்திற்கு கொண்டு செல்வார்கள். அடுத்தாக 28 துறைகளின் செயல்திட்டங்கள் மற்றும் “வெற்றி தமிழகம்” தொலைநோக்கு ஆவணத்தின் அடிப்படையில் மாவட்டங்களில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவெக ஆட்சியின் முதல் மாநாடு

மேலும் ஜூன் 30 அன்று நாளைய தினம் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை தொடர்பான திட்டங்கள் குறித்து வனத்துறை அதிகாரிகளான IFS அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. இதில், பசுமை தமிழ்நாடு திட்டம், வனப்பகுதிகளில் சாலை மேம்பாடு, வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவது, மனித–விலங்கு மோதல்களைத் தடுப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இந்த மாநாட்டின் இறுதியாக சிறப்பாக பணியாற்றிய IAS, IPS மற்றும் IFS அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பரிசு வழங்கி சிறப்பிக்க உள்ளார்.

Source: Read Full Article