திமுக மீது வைக்கப்படும் விமர்சனங்களில் ஒன்று அந்த கட்சியின் முக்கிய தலைவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதும் ஒன்றாகும். கடந்த திமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் பொன்முடி அவ்வாறு பேசியது அதற்கு சிறந்த உதாரணம் ஆகும். தற்போது மீண்டும் அப்படியொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

தவறு செய்ய விடுங்கள்:

திமுக-வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் பொருளாளருமானவர் டிஆர் பாலு. திமுக எம்பி-யான இவர் தாம்பரத்தில் நேற்று நடந்த கருணாநிதியின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது, பேசிய அவர் கால அவகாசம் வேண்டும் என்று அந்த முதலமைச்சரே கூறுகிறார். நீங்கள் அதற்குள் ஏன் அவரை தொல்லை செய்கிறீர்கள். நாம் என்ன தவறு செய்கிறோம் என்றால், ஆரம்பம் முதலே நம் இயக்கத்தில் உள்ள குறை என்னவென்றால் அவர்கள் தவறு செய்ய அனுமதிக்க வேண்டும். என்ன தவறு செய்தாலும் சுட்டிக்காட்டக்கூடாது. எங்கேயாவது சென்று குடை சாய வேண்டும். ஒட்டுமொத்தமாக அவர்கள் விழும் வரை இருக்க வேண்டும் என்றார்.

அரிவாளை எடுத்துட்டு வாங்க:

மேலும், முன்னாள் எம்பி கம்பம் செல்வேந்திரனைப் பார்த்து, தெற்கத்திக்காரன் பயப்படக்கூடாது. வரும்போது அரிவாள் எடுத்துட்டு வருவானு பார்த்தேன். வெறும் கையோடு வந்துருக்க. தெற்கத்திக்காரன் வரும்போது பெரிய கொடு அரிவாளை எடுத்துட்டு வந்து 4 பேரை வெட்டிட்டு போவாங்க. இங்க ஒன்னுமே கிடையாது. உன்னை 4 பேரு வெட்டிடுவாங்க போலயே

இவ்வாறு அவர் பேசினார்.

டி.ஆர்.பாலுவின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையாகியுள்ளது. தவறு செய்ய அனுமதியுங்கள் என்று குற்றத்தை தூண்டும் வகையிலும், அரிவாளை எடுத்து வெட்டுவாய் என்று வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசிய டி.ஆர்.பாலுவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

குவியும் கண்டனம்:

திமுக-வின் முக்கிய தலைவர்கள் பலரும் இதுபோன்று அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்து வருவது அந்த கட்சிக்கு தொடர்ந்து பின்னடைவை உருவாக்கி வருகிறது. மூத்த அரசியல்வாதி, மக்களவை உறுப்பினரே இப்படி பேசலாமா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பொன்முடி, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி போன்ற பல மூத்த திமுக தலைவர்கள் பலரும் இதுபோன்று ஏதேனும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூத்த நிர்வாகிகள் செயல்பாடு:

மேலும், இந்த கூட்டத்தில் பேசிய டி.ஆர்.பாலு 30 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் தங்களாலே மத்தியில் உள்ள பாஜக அரசை புரிந்து கொள்ள இயலவில்லை. தவெக-வினர் எப்படி சமாளிக்கப்போகிறார்கள்? என்றும் கேள்வி எழுப்பினர்.

திமுக இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணமாக மூத்த தலைவர்களின் நடவடிக்கைகளும் ஒரு காரணம் என்று தோல்விக்கான காரணத்தில் தெரிய வந்தது. அவர்களின் சர்ச்சையான பேச்சுக்கள் மட்டுமின்றி அவர்கள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் வேட்பாளர்களுக்காக சரியாக பணியாற்றவில்லை என்ற குற்றச்சாட்டையும் கட்சியில் பலரும் முன்வைத்துள்ளனர்.

Source: Read Full Article