தண்ணீர் தேடி வந்த இடத்தில் நேர்ந்த பயங்கரம்; ரத்த காயங்களுடன் மீட்ட வனத்துறையினர்!
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் சுற்றியுள்ள கீரப்பாக்கம், மாம்பாக்கம் மற்றும் ரத்தினமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அடர்ந்த வனக் காப்புக் காடுகள் உள்ளன. இந்தக் காடுகளில் ஆயிரக்கணக்கான மான்கள் மற்றும் வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது நிலவும் கடும் வெயில் மற்றும் நீர்நிலைகள் வறண்டு வருவதால், வனப்பகுதியை விட்டு விலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், இன்று காலை கீரப்பாக்கம் துலுக்காணத்தம்மன் கோவில் பின்புறம் உள்ள காட்டுப் பகுதியிலிருந்து புள்ளிமான் ஒன்று வெளியேறியுள்ளது.
கீரப்பாக்கம் அசோக் கிரீன் சிட்டி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த அந்தப் புள்ளிமானை, அங்குப் பதுங்கியிருந்த 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் திடீரெனத் துரத்தித் துரத்திக் கடிக்கத் தொடங்கின. குடியிருப்புகளைச் சுற்றி நீண்ட பாதுகாப்புச் சுவர்கள் இருந்ததால், மானால் தப்பித்து மீண்டும் காட்டிற்குள் செல்ல முடியவில்லை. நாய்களின் பிடியில் சிக்கிய மான் ரத்த காயங்களுடன் அலறித் துடித்தது. இந்தச் சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த அப்பகுதி இளைஞர்கள், கற்களை வீசியும் சத்தமிட்டும் தெருநாய்களை அங்கிருந்து விரட்டி அடித்தனர். நாய்களிடம் இருந்து தப்பிய அந்த மான், அங்கிருந்த ஒரு வீட்டின் முன்புள்ள துளசிச் செடி அருகே ரத்த வெள்ளத்தில் தஞ்சமடைந்தது.
இது குறித்துத் தகவலறிந்த தாம்பரம் வனத்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காயமடைந்த புள்ளிமானை மீட்ட அவர்கள், முதலுதவிக்காக மாம்பாக்கத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்ததைத் தொடர்ந்து, மானின் உடல்நிலை தேறியது. பின்னர் வனத்துறையினரின் பாதுகாப்போடு அந்தப் புள்ளிமான் மீண்டும் கீரப்பாக்கம் வனக் காப்புக் காட்டுப்பகுதிக்குள் விடப்பட்டது. வனவிலங்குகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க வனப்பகுதிக்குள் போதிய தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
