முதல்வர் ஸ்டாலின் வழங்கிய இலவச லேப்டாப்: எல்காட் (ELCOT) அதிகாரிகள் விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை!
சென்னை: தமிழ்நாடு அரசு 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கி வரும் இலவச லேப்டாப்களைப் பயன்படுத்துவதில் சில முக்கியமான கட்டுப்பாடுகளை எல்காட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விதிமுறைகளை மீறினால், லேப்டாப்பிற்கான ஒரு வருட உத்தரவாதம் செல்லாததாகிவிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
லேப்டாப்பில் உள்ள சிறப்பம்சங்கள்:
தமிழக அரசு வழங்கும் இந்த லேப்டாப்கள் மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும் வகையில் உயர்தரத் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன:
- பிராசஸர்: Intel i3 / AMD Ryzen 3
- நினைவகம்: 8 GB RAM மற்றும் 256 GB SSD
- இயக்கதளம்: Windows 11 Home மற்றும் BOSS Linux
- கூடுதல் பலன்கள்: MS Office 365, ஒரு வருட Windows Defender பாதுகாப்பு மற்றும் 6 மாத கால Perplexity Pro AI சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.
எச்சரிக்கை 1: இயக்கதளத்தை (OS) மாற்றக்கூடாது
மாணவர்களுக்கு வழங்கப்படும் லேப்டாப்பில் ஏற்கனவே Windows 11 மற்றும் BOSS Linux ஆகிய இயக்கதளங்கள் நிறுவப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களுக்குத் தெரிந்த மென்பொருள் நிபுணர்களைக் கொண்டு இந்த OS அமைப்பை மாற்றினால் அல்லது 'Format' செய்தால், நிறுவனங்கள் வழங்கியுள்ள வாராண்டி ரத்தாகிவிடும். மென்பொருள் சார்ந்த ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், அரசு வழங்கியுள்ள உதவி மையத்தையே அணுக வேண்டும்.
எச்சரிக்கை 2: புகைப்படங்களைச் சேதப்படுத்தக் கூடாது
லேப்டாப்பின் மேற்புறத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்தச் சின்னங்கள் அல்லது புகைப்படங்களைச் சுரண்டுவதோ, அதன் மீது ஸ்டிக்கர் ஒட்டுவதோ அல்லது சேதப்படுத்துவதோ கூடாது. லேப்டாப்பில் ஏதேனும் பழுது ஏற்பட்டு வாராண்டி கோரும்போது, இந்தப் புகைப்படங்கள் சேதமடைந்திருந்தால் வாராண்டி வழங்கப்பட மாட்டாது என எல்காட் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவிக்கு யாரை அணுகுவது?
லேப்டாப் தயாரிப்பு நிறுவனங்கள் ஒரு வருட வாராண்டி மற்றும் 3 வருடங்கள் வரை சர்வீஸ் வசதியை வழங்கியுள்ளன. லேப்டாப்பில் ஏதேனும் பழுது அல்லது சந்தேகம் ஏற்பட்டால், மாணவர்கள் 1800 599 9000 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.
மேலும், லேப்டாப்பைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல பிரத்யேக லேப்டாப் பேக் வழங்கப்பட்டுள்ளதால், அதைப் பயன்படுத்தி லேப்டாப்பை மாணவர்கள் பத்திரமாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

