நான்கு ஆண்டு காலப் போராட்டத்திற்கு விடை; ஜனவரி 1 முதல் புதிய ஓய்வூதிய முறை அமல் - முதல்வர் ஸ்டாலின் அதிரடி!
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகாலக் கனவான ஓய்வூதியப் பாதுகாப்பு விவகாரத்தில், ‘தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ (Tamil Nadu Assured Pension Scheme) தொடர்பான அதிகாரப்பூர்வ அரசாணையைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது, திமுக ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதியத் திட்டத்தை (CPS) ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) நடைமுறைப்படுத்துவோம் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், நிதிச் சூழல் காரணமாகப் பல ஆண்டுகளாக இது தள்ளிப்போனது அரசு ஊழியர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஜாக்டோ ஜியோ அமைப்புகளின் தொடர் போராட்டங்கள் மற்றும் அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தையின் பலனாக, அரசுப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்த புதிய ‘உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
தமிழக அரசின் நிதித்துறை வெளியிட்டுள்ள அரசாணையின்படி, ‘தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ கடந்த 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் பின் தேதியிட்டு (Retrospective Effect) அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த ஜனவரி 6-ஆம் தேதி மீண்டும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட சுமுக முடிவின் அடிப்படையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த புதிய திட்டத்தின் கீழ், ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு அவர்கள் கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது. இதன் மூலம் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்த பங்குச்சந்தை சார்ந்த நிச்சயமற்ற தன்மை நீக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான விரிவான விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் தனியே வெளியிடப்படும் என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அதிரடி நடவடிக்கையானது, பொங்கல் பண்டிகைக் காலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய பரிசாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசுப் பணியாளர்கள் நேரடியாகப் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
