“ஸ்டாலின் ஆள்வது கோட்டையை, சேலத்தை ஆள்வது அதிமுக தான்!” - கும்பகர்ண தூக்கத்தில் இருந்து முதல்வர் விழித்துள்ளதாக இபிஎஸ் சாடல்!
சேலம் மாவட்டம் எப்போதும் அதிமுக-வின் அசைக்க முடியாத கோட்டை என்பதை இந்த மக்கள் வெள்ளம் நிரூபித்துவிட்டது என்றும், வரும் தேர்தலில் சேலத்தின் 11 தொகுதிகளிலும் அதிமுக-வே வெற்றி பெறும் என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சூளுரைத்துள்ளார்.
சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட எழுச்சிப் பயண நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்ததாகக் குறிப்பிட்ட அவர், 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பதைத் தடுத்து நிறுத்த யாராலும் முடியாது எனத் தெரிவித்தார். தமிழகத்தை ஸ்டாலின் ஆளலாம், ஆனால் சேலத்தை ஆள்வது அதிமுக தான் என்று ‘பஞ்ச்’ வைத்த அவர், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு மற்றும் போதைப் பொருள் நடமாட்டம் குறித்துத் திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடினார்.
வீரபாண்டி தொகுதியில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் நான்காண்டு கால நிர்வாகத் தோல்விகளைப் பட்டியலிட்டார். "கடந்த நான்காண்டுகளாகக் கும்பகர்ணனைப் போலத் தூங்கிவிட்டு, இப்போது தேர்தல் நெருங்குவதால் புதிய புதிய அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார்" என்று அவர் விமர்சித்தார். கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 100 ஏரிகளில் நீர் நிரப்பும் மேட்டூர் உபரி நீர் திட்டம் மூலம் நான்கு தொகுதி விவசாயிகள் பயனடைவதை அவர் சுட்டிக்காட்டினார். திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலங்களை மக்கள் ஒப்பிட்டுப் பார்த்துத் தெளிவான முடிவெடுக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்துப் பேசுகையில், "தமிழகத்தில் சிறுமிகளுக்குப் பாதுகாப்பில்லை; சுமார் 6,099 சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்ற அதிர வைக்கும் புள்ளிவிவரத்தை முன்வைத்தார். ஒட்டுமொத்த நாட்டு மக்களுமே அஞ்சி வாழும் சூழல் நிலவுவதாகக் குறிப்பிட்ட அவர், வடமாநில சிறுவர்கள் கஞ்சா போதையில் பட்டாக்கத்தியுடன் தாக்குதல் நடத்திய சம்பவத்தைச் சுட்டிக்காட்டி போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய முதலமைச்சரைக் கண்டித்தார். சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்கு இது முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.
நிர்வாக ரீதியான குளறுபடிகள் குறித்துப் பேசிய இபிஎஸ், "தமிழகத்திற்கு இதுவரை நிரந்தர டிஜிபி-யை (DGP) இந்த அரசு நியமிக்கவில்லை" என்று குற்றம் சாட்டினார். ஒன்றிய அரசு மூன்று பெயர்களைப் பரிந்துரை செய்தும், தங்களுக்குச் சாதகமான ஆள் இல்லை என்பதால் அவர்களை நியமிக்காமல் ஸ்டாலின் அரசு காலம் தாழ்த்தி வருவதாக அவர் சாடினார். உடனடியாக நிரந்தர டிஜிபி-யை நியமித்துச் சட்டம் ஒழுங்கைச் சீர்செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். சேலத்தில் தொடங்கியுள்ள இந்த எழுச்சிப் பயணம் தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும் என்றும், அதிமுக-வின் வெற்றிப் பயணத்தைத் திசைதிருப்ப முடியாது என்றும் அவர் தனது உரையை நிறைவு செய்தார்.
.jpg)