ஆம்புலன்ஸில் சடலத்தைக் கடத்திச் சென்று நாடகம்: சிசிடிவி-யால் அம்பலமான உண்மை - கைதான மனைவி கோவை சிறையில் அடைப்பு!
பொள்ளாச்சி: கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவி தனது காதலனுடன் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்து, சடலத்தை 150 கிலோ மீட்டர் தொலைவில் வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கைதான மனைவி இந்திராணி தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் பின்னணி:
மதுரையைச் சேர்ந்த தேவா என்கிற ரித்தீஷ் (27), அவரது மனைவி இந்திராணி (26) ஆகியோர் பொள்ளாச்சி அடுத்த தாமரைக்குளம் பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்து, 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இந்திராணிக்கும் அவரது சித்தியின் கணவரான (சித்தப்பா முறை) வினோத்குமார் (41) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. கரூரில் தங்கியிருந்த வினோத்குமாருடன் இந்திராணி பழகி வந்ததை அறிந்த தேவா, தனது மனைவியைக் கண்டித்துள்ளார்.
பக்கா ஸ்கெட்ச் - கொலை மற்றும் உடல் கடத்தல்:
கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தேவாவைத் தீர்த்துக்கட்ட முடிவெடுத்த இந்திராணி, கடந்த 28-ம் தேதி இரவு வினோத்குமார் மற்றும் கரூரில் இருந்து வந்த சில நபர்களைத் தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அங்கு ஏற்பட்ட தகராறில், தேவாவைக் கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொலை செய்தனர்.
கொலையை மறைக்கத் திட்டமிட்ட கும்பல், கரூரில் இருந்து வரவழைக்கப்பட்ட ஒரு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தேவாவின் சடலத்தை 150 கி.மீ தொலைவில் உள்ள கரூர் ரயில் தண்டவாளத்தில் வீசிவிட்டுத் தப்பினர். தேவா ரயிலில் அடிபட்டுத் தற்கொலை செய்துகொண்டது போலக் காட்டவே இந்தத் திட்டம் தீட்டப்பட்டது.
![]() |
| தேவா என்கிற ரித்தீஷ் |
சிக்கியது எப்படி?
தேவா காணாமல் போனதாக அவரது தாயார் சுசீலா கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் இறங்கியபோது, சம்பவத்தன்று அந்தப் பகுதியில் ஒரு ஆம்புலன்ஸ் வந்து சென்றது சிசிடிவி மூலம் கண்டறியப்பட்டது. அந்த ஆம்புலன்ஸ் கரூரைச் சேர்ந்தது எனத் தெரிந்ததும், பயந்துபோன இந்திராணி போலீசில் சரணடைந்து உண்மையை ஒப்புக்கொண்டார்.
சிறையில் மனைவி - தனிப்படை அதிரடி:
இந்திராணியைக் கைது செய்த போலீசார், அவரைப் பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜனவரி 12-ம் தேதி வரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தப்பியோடிய கள்ளக்காதலன் வினோத்குமார் மற்றும் கூலிப்படையினரைப் பிடிக்க மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் தற்போது கரூர் மற்றும் திருவாரூர் பகுதிகளில் முகாமிட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
in
க்ரைம்
