“அதிமுக ஆட்சிக்கு வந்தால் 150 நாட்கள் வேலை!” - நடுக்கடலில் பேனா வைப்பதை விட மாணவர்களுக்குப் பேனா வழங்குவதே சிறப்பு என இபிஎஸ் காட்டம்!
அதிமுக-வில் உழைப்பவர் எவரும் பதவிக்கு வர முடியும் என்பதற்கு நானே சாட்சி; ஆனால் திமுக-வில் குடும்ப ஆட்சிக்கும் வாரிசு அரசியலுக்கும் மக்கள் வரும் தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சேலம் மாவட்டம் வீரபாண்டியில் நடைபெற்ற எழுச்சிப் பயணத்தின் தொடர்ச்சியாகப் பேசிய அவர், நடுக்கடலில் 82 கோடி ரூபாயில் பேனா நினைவுச் சின்னம் வைப்பதற்குப் பதிலாக, அந்த நிதியில் மாணவர்களுக்கு எழுதும் பேனாக்களை வழங்கலாம் எனத் திமுக அரசை விமர்சித்தார். மேலும், மத்திய அரசு 100 நாள் வேலைத் திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தியுள்ளது. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த வேலை நாட்களை 150 நாட்களாக உயர்த்துவோம் என அவர் உறுதி அளித்தார். தாலிக்குத் தங்கம் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்றும், ஏழை எளிய மக்கள் மற்றும் தனிக்குடித்தனம் செல்லும் தம்பதிகளுக்கு இலவச வீட்டுமனை வழங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் அவர் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீரபாண்டி தொகுதியில் ஆற்றிய உரையில், திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையும் ஊழல்களையும் கடுமையாகத் தோல் உரித்துக் காட்டினார். “சென்னை மக்கள் வாழ்வாதாரமின்றித் தவிக்கும் நிலையில், நடுச்சாலையில் கார் பந்தயம் நடத்துகிறார் உதயநிதி ஸ்டாலின்” என அவர் சாடினார். திமுக தனது 525 வாக்குறுதிகளில் 80 சதவீதத்தை நிறைவேற்றிவிட்டதாகப் பொய் கூறுவதாகக் குறிப்பிட்ட அவர், அதிமுக-வின் 28 மாத காலத் தொடர் அழுத்தத்தினால் தான் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது என்றும், தற்போது தோல்வி பயத்தில் மேலும் 17 லட்சம் பேருக்குத் தொகை வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்ட அவர், 2011 முதல் 2021 வரையிலான காலத்தில் 17 மருத்துவக் கல்லூரிகள், 28 பாலிடெக்னிக் மற்றும் 68-க்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரிகளைக் கொண்டு வந்து உயர்கல்வியில் புரட்சி செய்ததாகக் குறிப்பிட்டார். மின்சாரம், போக்குவரத்து, வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தேசிய விருதுகளைப் பெற்ற பெருமை அதிமுக-விற்கே உண்டு என்றார். மலைப்பகுதிகளில் சாலை வசதி மற்றும் கூட்டுக் குடிநீர் திட்டங்களை வழங்கியது அதிமுக அரசு தான் என்பதை அவர் நினைவு கூர்ந்தார்.
டாஸ்மாக் விற்பனையில் நடக்கும் முறைகேடுகள் குறித்துப் பேசிய அவர், ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில்கள் விற்பனையாகும் நிலையில், ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் வீதம் ஒரு நாளைக்கு 15 கோடி ரூபாயும், மாதத்திற்கு 450 கோடி ரூபாயும் முறைகேடாகச் செல்வதாகக் குற்றம் சாட்டினார். நெசவு மற்றும் விசைத்தறி தொழில்களின் சரிவை மீட்டு, அவற்றிற்குப் புத்துயிர் அளிக்க அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்தார். “எதிர்க்கட்சி என்ற அடையாளம் தெரியாத அளவிற்குத் திமுக ஊழலில் மூழ்கியுள்ளது” என அவர் சாடியதுடன், தாலிக்குத் தங்கம் மற்றும் காங்கிரீட் வீடு வழங்கும் திட்டங்கள் மூலம் ஏழை மக்களின் வாழ்வாதாரம் காக்கப்படும் எனத் தனது உரையை நிறைவு செய்தார்.
