148 பணியிடங்களுக்கு 9,932 பேர் போட்டி;கோரிமேடு மைதானத்தில் போலீஸ் உடல் தகுதித் தேர்வு தொடக்கம்!
புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 148 காவலர் பணியிடங்களுக்கான நேரடி ஆள்சேர்ப்பு நடவடிக்கையின் முக்கியக் கட்டமான உடல் தகுதித் தேர்வுகள் இன்று கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கியது. தங்களது 'காக்கி' கனவை நனவாக்கத் துடிக்கும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அதிகாலை முதலே மைதானத்தில் குவியத் தொடங்கியதால் அந்தப் பகுதியே பரபரப்பாகக் காணப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்ட இந்த 148 பணியிடங்களுக்கு (ஆண்-100, பெண்-48) சுமார் 10,063 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் தகுதியுள்ள 9,932 விண்ணப்பதாரர்களுக்கு இன்று முதல் வரும் 12-ஆம் தேதி வரை உடல் தகுதித் தேர்வுகள் நடைபெறவுள்ளன. முதல் நாளான இன்று 500 இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. விண்ணப்பதாரர்களுக்கு முதலில் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, பின்னர் மார்பளவு, உயரம் மற்றும் எடை பரிசோதனைகள் துல்லியமாக மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து, 800 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் ஆகிய தேர்வுகள் நடத்தப்பட்டன.
புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று காலை நேரில் வந்து உடல் தகுதித் தேர்வு பணிகளை ஆய்வு செய்தார். பின்னர், 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தைப் பச்சைக்கொடி அசைத்துத் தொடங்கி வைத்த அவர், தேர்வில் பங்கேற்ற இளைஞர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது டிஜிபி ஷாலினி சிங், டிஐஜி சத்திய சுந்தரம் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். நாளை (சனிக்கிழமை) 750 பேருக்கும், அதன் பிறகு தினசரி 1,000 பேருக்கும் தேர்வுகள் நடைபெறவுள்ளது. குறிப்பாக, வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் பெண்களுக்கான பிரத்யேக உடல் தகுதித் தேர்வுகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. முறைகேடுகளைத் தவிர்க்க மைதானம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
