தேனி அருகே அதிகாலையில் நடந்த பயங்கரம்; ஒளிரும் பட்டைகள் வழங்காததே விபத்துக்குக் காரணமா? - பக்தர்கள் குமுறல்!
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் புனிதப் பயணம் மேற்கொண்ட ஐயப்ப பக்தர்கள் மீது வேன் மோதிய கோர விபத்தில், இருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை வேளையில் நடந்த இந்த விபத்து, பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியிலிருந்து 8 பேர் கொண்ட ஐயப்ப பக்தர்கள் குழு, சபரிமலைக்கு பாதயாத்திரையாகப் புறப்பட்டது. நேற்று மாலை ஆண்டிபட்டியிலிருந்து கிளம்பிய இவர்கள், இரவு வீரபாண்டியில் தங்கிவிட்டு, இன்று அதிகாலை 4 மணியளவில் திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சீலையம்பட்டி பகுதியில் சபரிமலை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, திண்டுக்கல் வேடசந்தூரிலிருந்து ஐயப்ப பக்தர்களை ஏற்றிக்கொண்டு சபரிமலை நோக்கி வந்து கொண்டிருந்த வேன் ஒன்று, எதிர்பாராத விதமாகப் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் குழு மீது பயங்கரமாக மோதியது.
இந்தக் கொடூர விபத்தில், ஆண்டிபட்டியைச் சேர்ந்த குமார் (55) மற்றும் ராம்கி (36) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். நல்வாய்ப்பாக, குழுவில் இருந்த மற்ற பக்தர்கள் காயமின்றி உயிர் தப்பினர். தகவல் அறிந்து விரைந்து வந்த சின்னமனூர் போலீசார், பலியானவர்களின் உடல்களைக் கைப்பற்றித் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் தினேஷ்குமாரைப் பிடித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த காலங்களில் சபரிமலை மற்றும் பழனிக்குப் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, விபத்துகளைத் தவிர்க்கக் காவல்துறை சார்பில் 'ஒளிரும் பட்டைகள்' (Reflective Stickers) வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாகச் செய்யப்படாததே, இருளில் பக்தர்கள் வந்ததை டிரைவர் கவனிக்க முடியாமல் போனதற்குக் காரணம் என சக பக்தர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். ஒரு ஆன்மீகப் பயணம் ரத்தக் கறையுடன் முடிந்திருப்பது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.
