13 மார்க் வாங்கி ஃபெயில் ஆன ஆட்சி!- கடலூரில் என்.எல்.சி மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்துச் சரமாரித் தாக்கு! 13% Marks and Failed: PMK Leader Anbumani's Fierce Attack on CM Stalin in Cuddalore

திமுகவுக்குக் காய்ச்சல் வந்துவிட்டது; இனி ஜன்னிதான்! - அதிமுக-பாமக மெகா கூட்டணியால் அன்புமணி ராமதாஸ் அதிரடி!



தமிழக அரசியல் களம் 'கிளைமாக்ஸ்' நெருங்கும் வேளையில், அதிமுகவுடன் பாமக கைகோர்த்துள்ள விவகாரம் ஆளுங்கட்சியான திமுகவுக்குப் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் 'பஞ்ச்' பேசியுள்ளார். கடலூரில் இன்று நடைபெற்ற பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், "அதிமுக-பாமக கூட்டணி என்ற 'மெகா சிஸ்டம்' உருவான உடனேயே திமுகவுக்குக் காய்ச்சல் வந்துவிட்டது; தேர்தல் நெருங்கும் போது அவர்களுக்கு ஜன்னிதான் வரும்" என ஆவேசமாகத் தெரிவித்தார். இன்னும் மூன்றே மாதங்களில் இந்த மோசமான ஆட்சிக்கு 'எண்ட் கார்டு' போடப்படும் என்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து 8 வயது சிறுமி முதல் 80 வயது முதியவர் வரை அச்சத்துடனேயே வாழும் அவல நிலை உள்ளதாகவும் அவர் தனது உரையில் 'சரவெடி'யைக் கொளுத்திப் போட்டார்.

கடலூர் மாவட்டத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்வைத்து 'லோக்கல் சென்டிமென்ட்' அரசியலைத் தொட்ட அன்புமணி, "சிப்காட் என்பது இப்பகுதிக்கு வரமல்ல, அது ஒரு சாபக்கேடு; தாய்ப்பாலில் கூட நச்சு கலந்திருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன" என வேதனையோடு குறிப்பிட்டார். குறிப்பாக என்.எல்.சி (NLC) விவகாரத்தில் தனது 'வார்னிங்'கை விடுத்த அவர், மக்களின் சோறு போடும் மண்ணைப் பறித்து, குடிநீரைக் கடலில் வீணாகக் கலக்கும் அந்த நிறுவனம் உடனடியாக வெளியேற வேண்டும் என்றார். வேளாண் துறை அமைச்சரே விவசாயிகளின் நிலத்தைப் பிடுங்கி கார்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், இந்த 'அராஜகம்' இன்னும் இரண்டு மாதங்களில் முடிவுக்கு வரும் எனத் தொண்டர்களிடையே நம்பிக்கையை விதைத்தார்.

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளைக் கிழித்துத் தொங்கவிட்ட அன்புமணி ராமதாஸ், "கொடுக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் வெறும் 66-ஐ மட்டுமே நிறைவேற்றிவிட்டு, வெறும் 13 சதவீத மதிப்பெண்களுடன் 'பெயில்' (FAIL) ஆன இந்த ஆட்சி மீண்டும் தேவையா?" என மக்களிடம் கேள்வி எழுப்பினார். ஸ்டாலின் செய்த மிகப்பெரிய துரோகம் 'சாதிவாரி கணக்கெடுப்பு' நடத்தாததுதான் என்றும், நாங்கள் ஆட்சிக்கு வந்த முதல் கையெழுத்தே சாதிவாரி கணக்கெடுப்புதான் என்றும் உறுதி அளித்தார். "சாகும் தருவாயில் இறைவனை நினைப்பது போல, இப்போது தேர்தல் நேரத்தில் 'லேப்டாப்' கொடுத்து நாடகமாடுகிறார்கள்; இப்படி அரசியலில் நடிப்பதற்குப் பதில் நீங்கள் சினிமாவுக்கே சென்றுவிடலாம்" என முதலமைச்சர் ஸ்டாலினை நோக்கி 'எகத்தாளமாக'ச் சாடினார். அரசு ஊழியர்களைப் பழைய ஓய்வூதியத் திட்ட விவகாரத்தில் திமுக ஏமாற்றி வருவதாகவும், அதிமுக-பாமக கூட்டணி மட்டுமே விடிவு தரும் என்றும் அவர் தனது உரையை நிறைவு செய்தார்.


Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk