இந்தி திணிப்பு விவகாரத்தில் பாஜகவுக்கு எச்சரிக்கை; திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்லும் என மதிமுக பொதுச்செயலாளர் அதிரடி!
சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, செய்தியாளர்களைச் சந்தித்தபோது அதிமுக மற்றும் பாஜகவை மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடினார். குறிப்பாகக் கனிமொழி - ராகுல் காந்தி சந்திப்பு குறித்து விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு (இபிஎஸ்) தகுதியான பதிலடியைக் கொடுத்தார்.
இபிஎஸ்-ஸுக்குப் பதிலடி மற்றும் கூட்டணி விவகாரம்:
திமுக மற்றும் காங்கிரஸ் இடையே எவ்வித விரிசலும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்திய வைகோ, "திமுகவிற்கும் காங்கிரஸுக்கும் நெருடல் இருப்பது போல் தோன்றும், ஆனால் அது நீர் பூத்த வடு போல மறைந்து போகும். கனிமொழி, ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசியதில் எந்த நெருடலும் இருக்காது" என்றார்.தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-ஸைத் தாக்கிய அவர், "அதிமுகவை மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் எவ்வளவு அவமானப்படுத்தினாலும், அனைத்தையும் சகித்துக் கொண்டு இருந்தவர் தான் முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி. அவர் கனிமொழி - ராகுல் காந்தி சந்திப்பு குறித்துப் பேச தகுதியற்றவர்" என்று கூறினார். பாஜகவின் இந்தி திணிப்பும், பட்ஜெட் அரசியலும்மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சி குறித்துப் பேசுகையில் வைகோ மிக ஆவேசமாகக் காணப்பட்டார்.
இந்தி திணிப்புக்கு எச்சரிக்கை:
"பாஜக அரசு வெறிபிடித்துப் போய் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தைத் திணிக்க நினைக்கிறார்கள். ராணுவத்தையே எதிர்கொண்டு பல உயிர்களைப் பலி கொடுத்து இந்தி திணிப்பை எதிர்த்த மாநிலம் தமிழ்நாடு என்பதை மறந்துவிட வேண்டாம். அவர்களின் அகங்காரம் பலமான எதிர்விளைவுகளைச் சந்திக்கும்" என்று எச்சரித்தார்.
பட்ஜெட் 'பகல் கனவு':
வரவிருக்கும் பட்ஜெட்டில் தமிழகத்திற்குப் பாரபட்சம் காட்டப்படும் என்றும், அதே சமயம் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றப் பிரதமர் மோடி பாரதியார் மற்றும் சங்க இலக்கியங்களை இந்தியில் மேற்கோள் காட்டிப் புகழ்வார் என்றும் விமர்சித்தார். "பிரதமரின் இந்தப் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது" என்றார்.
2026 தேர்தல் வியூகம்:
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் குறித்துப் பேசுகையில், "திமுக கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் என முதலமைச்சர் கூறியுள்ளார், அதையே நானும் 'வேலிடேட்' (Validate) செய்கிறேன். தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்துப் பொறுத்திருந்து பாருங்கள்" என்று கூறி தனது பேட்டியை நிறைவு செய்தார்.மேலும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி சுவாமிநாதன் தனது வரம்புகளை மீறிவிட்டார் என்றும், திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக 'ஆக்சன்' (Action) எடுத்து வருவதாகவும் வைகோ பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
