11 நாடுகளைச் சேர்ந்த 135 வீரர்கள் பங்கேற்பு - மேலக்கோட்டையூரில் மூன்று நாட்கள் நடைபெறும் விறுவிறுப்பான சைக்கிளிங் தொடர்!
சென்னை வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில், '2026 ட்ராக் ஆசிய கோப்பை' (Track Asia Cup 2026) சர்வதேச தடகள சைக்கிளிங் போட்டி இன்று மிகச்சிறப்பாகத் தொடங்கியது. இந்தப் பிரம்மாண்ட விளையாட்டுத் தொடரைத் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
சர்வதேச அளவிலானப் போட்டி:
ஆசியக் கண்டத்தின் முன்னணி நாடுகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன:
பங்கேற்கும் நாடுகள்:
இந்தியா, நேபாளம், மலேசியா, இந்தோனேஷியா, சிங்கப்பூர், கஜகஸ்தான், பிலிப்பைன்ஸ், மியான்மர், லித்துவேனியா, மாலத்தீவு உள்ளிட்ட 11 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் களமிறங்கியுள்ளனர். மொத்தம் 135 வீரர், வீராங்கனைகள் இந்தப் போட்டியில் தங்களது திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.
இன்று தொடங்கிய இந்தப் போட்டிகள், நாளை மற்றும் நாளை மறுநாள் எனத் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறுகின்றன. இதில் தனிநபர் தடகளப் போட்டிகள் மற்றும் குழு தடகளப் போட்டிகள் என இரு பிரிவுகளிலும் விறுவிறுப்பான மோதல்கள் அரங்கேற உள்ளன.
பதக்கங்கள் வழங்கிய துணை முதலமைச்சர்:
தொடக்க விழாவைத் தொடர்ந்து நடைபெற்ற குழுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்குத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், அமைச்சர் தா.மோ. அன்பரசன், எம்.எல்.ஏ-க்கள் எஸ்.எஸ். பாலாஜி, எஸ்.ஆர். ராஜா, அரவிந்த் ரமேஷ், தாம்பரம் மேயர் வசந்தகுமாரி மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டப் பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். சென்னையில் இத்தகைய சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவது, தமிழக விளையாட்டுத் துறையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கானச் சான்றாகப் பார்க்கப்படுகிறது.
.jpeg)
