ஈழத் தமிழர்களுக்காகப் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் - முத்துக்குமார் நினைவு நாளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தல்!
ஈழப் போராட்டத்தில் தன்னுயிரை ஈந்த மாவீரன் முத்துக்குமாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடியில் நடைபெற்ற அஞ்சலிக் கூட்டத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) நிர்வாகியும், எம்பி-யுமான தமிழ் இனியன் கலந்துகொண்டு உரையாற்றினார். முத்துக்குமாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர் மத்திய மற்றும் மாநில அரசுகள் மீது அடுக்கடுக்கானக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்திய அரசுக்குக் கண்டனம்:
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படுவதும், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதும் கவலையளிப்பதாகத் தெரிவித்தார். சொந்த நாட்டு மீனவர்களையேப் பாதுகாக்க முடியாத இந்திய அரசு, இலங்கைத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வைப் பெற்றுத் தரும் என்பதில் எங்களுக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை" என்று அவர் சாடினார்.
பொது வாக்கெடுப்பு:
ஈழத் தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கச் சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், அதற்கான அழுத்தத்தைச் சர்வதேச அளவில் உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தமிழக அரசுக்குக் கோரிக்கை:
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களது ஆட்சிக் காலத்தில் தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 'தனி ஈழம்' தொடர்பானத் தீர்மானத்தைத் தமிழக அரசு மீண்டும் முன்னிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்தியாவில் பல ஆண்டுகளாக அகதிகளாகத் தங்கியுள்ள ஈழத் தமிழர்களுக்கு உடனடியாக இந்தியக் குடியுரிமை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
உயிர் மூச்சு:
"தனி ஈழக் கோரிக்கை என்பது உலகெங்கும் வாழும் தமிழர்களின் உயிர் மூச்சு; அது என்றென்றும் தொடரும்" என அவர் உறுதியுடன் கூறினார். முத்துக்குமார் போன்றவர்களின் தியாகம் வீண் போகாது என்றும், தமிழினத்தின் விடுதலைக்காக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும் தமிழ் இனியன் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.
.png)