சுழன்று வந்து தரையில் மோதிய விமானம் - பெட்ரோல் பங்க் கேமராவைத் தொடர்ந்து ஓடுதளக் காட்சியும் சிக்கியது!
மகாராஷ்டிர மாநிலத் துணை முதலமைச்சர் அஜித் பவார் பலியான கோர விமான விபத்து குறித்து, ஒவ்வொரு வினாடியும் அதிர்ச்சியூட்டும் புதியத் தகவல்கள் வெளி
யாகிக் கொண்டிருக்கின்றன. இன்று காலை 8:45 மணியளவில் பாராமதி விமான நிலைய ஓடுதளத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில், அஜித் பவார் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தச் சம்பவம் தேசத்தையே உலுக்கியுள்ளது.
விபத்து நிகழ்ந்த தருணத்தில் என்ன நடந்தது என்பதை விளக்கும் வகையில், தற்போது புதிய சிசிடிவி (CCTV) காட்சிகள் வெளியாகியுள்ளன.
பெட்ரோல் பங்க் காட்சி:
விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள நெடுஞ்சாலையில் அமைந்திருந்த ஒரு பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில், விமானம் தாழ்வாகப் பறந்து வந்து விழுந்தக் காட்சிகள் ஏற்கனவே பதிவாகியிருந்தது.
ஓடுதளக் காட்சி:
தற்போது வெளியாகியுள்ள மற்றொரு சிசிடிவி காட்சியில், விமானம் ஓடுதளத்தில் (Runway) தரையிறங்க முயன்றபோது, திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து சில வினாடிகளில் தறிகெட்டுச் சுழன்றவாறு தரையில் மோதி விபத்துக்குள்ளாகும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
விசாரணை தீவிரம்:
தரையிறங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்ட ஒரு நிமிடத்திலேயே, விமானம் ஏன் இவ்வளவு கோரமாகச் சுழன்று விழுந்தது என்பது குறித்து விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) தனது உயர்மட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது. தொழில்நுட்பக் கோளாறா அல்லது காற்றின் வேகம் காரணமாக விமானம் சுழன்றதா என்பதைத் தெரிந்துகொள்ள, சிசிடிவி ஆதாரங்கள் மற்றும் விமானத்தின் கருப்புப் பெட்டித் தரவுகள் முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித் பவாரின் மறைவால் மகாராஷ்டிராவில் பதற்றமானச் சூழல் நிலவி வரும் நிலையில், அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது சொந்த ஊரான பாராமதிக்குக் கொண்டு செல்லப்பட உள்ளது.
