துயரத்தின் பிடியில் பாராமதி! சொந்த மண்ணிலேயே பிரிந்த உயிர்.. மகாராஷ்டிராவில் 3 நாள் அரசுமுறைத் துக்கம் அறிவிப்பு!
மகாராஷ்டிர மாநில அரசியலின் ‘சாணக்கியர்’ என்றும், ஆறு முறை துணை முதலமைச்சர் பதவியை அலங்கரித்த சாதனையாளர் என்றும் போற்றப்படும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் அனந்தராவ் பவார் (65), இன்று காலை பாராமதி விமான நிலையத்தில் நிகழ்ந்த கோர விமான விபத்தில் உயிரிழந்தார். அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மும்பையிலிருந்து பாராமதிக்குச் சிறிய ரகத் தனி விமானத்தில் (Learjet 45 - VT-SSK) அவர் பயணித்தபோது இந்தத் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாராமதி வான்பரப்பில் விமானம் தரையிறங்க முயன்றபோது ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுதளத்தின் ஓரத்திலிருந்த பள்ளத்தில் விழுந்து நொறுங்கி அடுத்தச் சில நொடிகளில் தீப்பிடித்து எரிந்தது. விபத்து நடந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட அஜித் பவார் மற்றும் அவருடன் பயணித்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்; இருப்பினும், சிகிச்சை பலனின்றி அஜித் பவார் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இச்சம்பவத்தில் அவருடன் பயணித்த இரண்டு விமானிகள், ஒரு பாதுகாப்பு அதிகாரி மற்றும் உதவியாளர் என மொத்தம் 5 பேரும் உயிரிழந்துவிட்டதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தனது விளக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.
மறைந்த அஜித் பவார், 1959-ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி பிறந்தவர். தனது சித்தப்பா சரத் பவாரின் வழிகாட்டுதலில் அரசியலில் தடம் பதித்து, மிகக் குறுகிய காலத்திலேயே மகாராஷ்டிராவின் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தார். கூட்டணி அரசியலில் வல்லவரான இவர், காங்கிரஸின் பிரித்விராஜ் சவான் முதல் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் வரை பல்வேறு முதலமைச்சர்களுடன் இணைந்து துணை முதலமைச்சராகப் பணியாற்றிப் ‘பதவி மேதை’ எனப் பெயர் பெற்றவர். கடந்த 2023-ஆம் ஆண்டு சரத் பவாரிடம் இருந்து பிரிந்து, பாஜக கூட்டணியில் இணைந்து மீண்டும் துணை முதல்வர் பதவியைப் பெற்றதோடு, கட்சியின் பெயரையும் ‘கடிகாரம்’ சின்னத்தையும் தன்வசமாக்கிக் கொண்டு தனது அரசியல் அதிகாரத்தை நிலைநாட்டினார்.
இந்திய அரசியலில் சஞ்சய் காந்தி, ராஜசேகர ரெட்டி போன்ற பெரும் தலைவர்களை விமான விபத்துகள் காவு வாங்கிய வரிசையில், இன்று அஜித் பவாரின் உயிரையும் ஆகாயம் பறித்துக் கொண்டது ஒட்டுமொத்த தேசத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவையொட்டி மகாராஷ்டிராவில் மூன்று நாள் அரசுமுறைத் துக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
