டெல்லியில் 45 நிமிட மெகா ஆலோசனை! ராகுல் காந்தியுடன் கனிமொழி எம்.பி. திடீர் சந்திப்பு!

ஆட்சியில் பங்கு கிடையாது! டெல்லி மேலிடத்திடம் திமுக போட்ட முட்டுக்கட்டை!


தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தேசிய அரசியலின் மையப்புள்ளியான டெல்லியில் இன்று ஒரு முக்கிய அரசியல் நகர்வு அரங்கேறியுள்ளது. திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும், கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுத் தலைவருமான கனிமொழி, காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

சுமூகமான 45 நிமிடப் பேச்சுவார்த்தை: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்கச் சென்றுள்ள கனிமொழி, ராகுல் காந்தியுடன் சுமார் 45 நிமிடங்கள் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பின் போது விவாதிக்கப்பட்ட முக்கியத் தகவல்கள் இதோ:

கூட்டணி உறுதி: 

திமுக தலைமையிலான 'இந்தியா' கூட்டணி தோழமை கட்சிகளுடன் தொடர்ந்து பயணிக்க விரும்புவதையும், காங்கிரஸ் தலைமையை திமுக உயர்ந்த மதிப்புடன் பார்ப்பதையும் ராகுல் காந்தியிடம் கனிமொழி உறுதிப்படுத்தினார்.

அதிகாரத்தில் பங்கு:

தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் 'ஆட்சியில் பங்கு' (Power Sharing) எனக் கூறி வருவது குறித்து திமுகவின் நிலைப்பாட்டை கனிமொழி தெளிவுபடுத்தினார். தமிழகத்தில் அத்தகைய நடைமுறை இல்லை என்பதையும், மாநிலப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரின் கருத்துகள் கூட்டணியில் அதிருப்தியை ஏற்படுத்தும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

தொகுதிப் பங்கீடு: 

கூடுதல் தொகுதிகள் தொடர்பான கோரிக்கைகளை வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் திமுக அமைக்கவுள்ள குழுவின் மூலம் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

ராகுல் காந்தியின் பதில்: 

தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் அமைத்துள்ள குழுவின் மூலம் முறையான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்றும், அதில் தேர்தல் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் பங்கேற்பார் என்றும் ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டம்: 

இன்னும் ஓரிரு வாரங்களில் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெறவுள்ள பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார். அந்தப் பயணத்திற்கு முன்னதாகவே தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணி தொடர்பான இழுபறிகளை முடிவுக்குக் கொண்டு வர இரு கட்சிகளும் மும்முரம் காட்டி வருகின்றன.

திமுக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் இடையேயான இந்தச் சந்திப்பு மிகவும் சுமூகமாக நடைபெற்றதாகவும், நிலுவையில் உள்ள சிறு கருத்து வேறுபாடுகள் விரைவில் களையப்படும் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk