நேரடி கவுண்டர்களில் காத்திருக்கத் தேவையில்லை; பக்தர்களின் சிரமத்தைக் குறைக்க தேவஸ்தானம் மாஸ்டர் பிளான்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எவ்வித சிபாரிசு கடிதங்களும் இன்றி வி.ஐ.பி தரிசனம் செய்ய வழிவகை செய்யும் ‘ஸ்ரீவாணி’ தரிசன டிக்கெட்டுகள், வரும் 9-ஆம் தேதி முதல் ஆன்லைனில் வழங்கப்படும் எனத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
பழைய கோவில்களைப் புனரமைக்கவும், புதிய கோவில்களைக் கட்டவும் தொடங்கப்பட்ட ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ. 10,000 நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு இந்த வி.ஐ.பி தரிசனம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை திருமலையில் நேரடியாக வழங்கப்பட்டு வந்த 800 டிக்கெட்டுகளைப் பெறுவதற்காகப் பக்தர்கள் இரவு முழுவதும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை இருந்தது. பக்தர்களின் இந்தச் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, திருமலையில் நேரடியாக டிக்கெட் வழங்கும் முறை வரும் ஜனவரி 9-ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டு, அவை ஆன்லைன் முறைக்கு மாற்றப்படுகின்றன.
.jpg)
தேவஸ்தானத்தின் இந்தப் புதிய முடிவின்படி, பக்தர்கள் இனி தங்களது இருப்பிடத்தில் இருந்தே மொபைல் செயலி அல்லது இணையதளம் வாயிலாக ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இதற்காகத் தினந்தோறும் காலை 9 மணிக்கு ஆன்லைனில் 800 டிக்கெட்டுகள் வெளியிடப்படும். மதியம் 2 மணி வரை இந்த டிக்கெட்டுகள் இணையதளத்தில் கிடைக்கும். டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள், அதே நாளில் மாலை 4 மணி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஒரு குடும்பத்தில் இருந்து மொத்தம் 4 நபர்கள் (1+3 உறுப்பினர்கள்) மட்டுமே இவ்வாறு முன்பதிவு செய்ய முடியும்.
டிக்கெட் முன்பதிவில் முறைகேடுகளைத் தவிர்க்க ஆதார் எண் மற்றும் மொபைல் எண் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 'முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் இந்த ஆன்லைன் டிக்கெட்டுகள் வழங்கப்படும். இது ஒரு மாதத்திற்குச் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட உள்ளது. ஏற்கனவே ஆன்லைன் மூலம் தினமும் வழங்கப்பட்டு வரும் 500 ஸ்ரீவாணி டிக்கெட்டுகள் எவ்வித மாற்றமுமின்றித் தொடரும். அதேபோல், திருப்பதி விமான நிலையத்தில் தினமும் வழங்கப்படும் 200 ஆஃப்லைன் டிக்கெட்டுகள் வழக்கம் போல் தொடரும் என தேவஸ்தானம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த மாற்றங்களை உணர்ந்து பக்தர்கள் தங்களது தரிசனப் பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
