1000-க்கும் மேற்பட்ட அரங்குகள்; சைதாப்பேட்டை டூ நந்தனம் இலவசப் பேருந்து - முழு விபரங்கள்!
தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (BAPASI) சார்பில் 49-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நாளை மறுநாள் (ஜனவரி 8) கோலாகலமாகத் தொடங்குகிறது.
வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தப் புத்தகக் காட்சியினை, நாளை மறுநாள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முறைப்படி தொடங்கி வைக்க உள்ளார். இந்த விழாவின் சிறப்பம்சமாக, தலைசிறந்த எழுத்தாளர்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயரிலான விருதுகளை வழங்கி முதலமைச்சர் கௌரவிக்க உள்ளார். நாளை ஒருநாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், புத்தக அரங்குகளைத் தயார் செய்யும் பணிகளும், பதிப்பாளர்கள் புத்தகங்களை அடுக்கும் பணிகளும் தற்போது போர்க்கால அடிப்படையில் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டு 49-வது சென்னை புத்தகக் காட்சி வரும் ஜனவரி 8-ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுவரை இல்லாத சாதனையாக இந்த ஆண்டு 1000-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. வெறும் புத்தக விற்பனை மட்டுமன்றி, புதிய நூல்களை வெளியிடுவதற்கான தனி அரங்கு மற்றும் புத்தகங்கள் குறித்த விவாதங்கள் நடத்துவதற்கான சிறப்பு மேடைகளும் மைதானத்தில் தயார் செய்யப்பட்டுள்ளன. வாசகர்கள் காலை 11 மணி முதல் இரவு 8:30 மணி வரை புத்தகங்களை வாங்கி மகிழலாம்.
மைதானத்திற்கு வரும் பொதுமக்களின் வசதிக்காகச் சென்னை மாநகரப் போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து புத்தகக் காட்சி மைதானம் வரை மக்கள் இலவசமாகப் பயணம் செய்யப் பேருந்து வசதி இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மைதானத்திற்குள் போதிய குடிநீர் வசதி, உணவகங்கள் மற்றும் கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படைத் தேவைகளும் விரிவான முறையில் செய்யப்பட்டு வருகின்றன. இந்தப் புத்தகத் திருவிழாவில் லட்சக்கணக்கான வாசகர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துச் சீரமைப்புப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
