கரூர் விவகாரம்: விஜய்க்கு சம்மன் அனுப்பியது சட்டப்படி சரியே! - தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி!
நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் அவரது கடைசிப் படமாக இருக்கும் என்பதைத் தான் நம்பவில்லை என்றும், அரசியலில் சாதிக்க முடியாவிட்டால் அவர் மீண்டும் சினிமாவுக்கே திரும்புவார் என்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி அளித்த தீர்ப்பைக் கொண்டாடும் வகையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் தமிழிசை சௌந்தரராஜன் இன்று தீபமேற்றி வழிபாடு நடத்தினார். தீப விவகாரத்தில் உயிர்நீத்த பூரணச்சந்திரனுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சினிமா மற்றும் அரசியல் குறித்துப் பல்வேறு அதிரடி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, விஜய் மீதான சிபிஐ (CBI) விசாரணை மற்றும் அவரது கடைசிப் படம் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், "அரசியலில் ஏதோ ஒரு கனவில் வருவார்கள்; அது நிறைவேறவில்லை என்றால் மீண்டும் திரைத்துறைக்கே திரும்பி விடுவார்கள். 'ஜனநாயகன்' விஜய்யின் கடைசிப் படம் என்பதை நான் நம்பவில்லை" எனத் தெரிவித்தார்.
'ஜனநாயகன்' திரைப்படத்தின் தணிக்கை விவகாரத்திற்கும் பாஜக-விற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று விளக்கிய தமிழிசை, அது ஒரு தனிப்பட்ட துறையின் நடவடிக்கை என்றார். மேலும், கரூர் விவகாரத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணையில் விஜய்க்குச் சம்மன் அனுப்பப்பட்டிருப்பதைச் சட்டத்தின் இயல்பான நடவடிக்கையாகவே பார்ப்பதாகக் குறிப்பிட்டார். சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படம் குறித்துப் பேசுகையில், "நாத்திகம் பேசினாலும் பராசக்தி என்று தான் பெயர் வைக்க வேண்டி இருக்கிறது; பராசக்தியின் மகன் முருகனைத் தான் நாங்கள் இப்போது வணங்கிக் கொண்டிருக்கிறோம்" எனச் சுட்டிக்காட்டினார். இந்தி எதிர்ப்பு குறித்துப் பேசும் திமுக, அன்று இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தொண்டர்களைச் சுட்டுக் கொன்ற காங்கிரஸைத் தோளில் சுமந்து கொண்டிருப்பது வேடிக்கையாக உள்ளது என்றும் விமர்சித்தார்.
திருப்பரங்குன்றம் தீர்ப்பு குறித்துப் பேசிய அவர், இந்துக்களுக்கு எதிராக திமுக அரசு காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுவதாகச் சாடினார். "ஒரு மதத்திற்கு அனுமதி அளித்துவிட்டு, இந்துக்களுக்கு மட்டும் தடை விதிப்பது எந்த விதத்தில் நியாயம்? ஆன்மீகத்தை அரசியல் ஆக்கியதற்காக நீதிமன்றமே அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது" எனத் தெரிவித்தார். குறிப்பாக, அமைச்சர் ரகுபதி இத்தீபத்தை சுடுகாட்டு நெருப்போடு ஒப்பிட்டுப் பேசியதற்குத் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்த அவர், "மங்களகரமான நிகழ்வைப் பிணத்தோடு ஒப்பிடும் வக்கர புத்தி கொண்டவர்களுக்கு இந்துக்கள் ஓட்டுப் போடக்கூடாது" என ஆவேசமாகப் பேசினார்.
முதலமைச்சர் ஸ்டாலின் சிறுபான்மையினருக்கு மட்டும் பாதுகாப்பாக இருப்போம் என்று கூறுவது, பெரும்பான்மை மக்களை அவமதிப்பதாகும் என்று தமிழிசை குறிப்பிட்டார். "பெரும்பான்மை மக்களின் பெருந்தன்மையால் தான் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்; அந்தப் பெருந்தன்மையை முதலமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்த அவர், எத்தனை மேல்முறையீடு செய்தாலும் இறுதியில் முருகனின் தீர்ப்பே வெல்லும் எனக் கூறித் தனது பேட்டியை நிறைவு செய்தார்.
