அப்பா, பையன் இரண்டு பேர்தான் இளைஞர்களா? - ஈரோடு மண்ணில் தவெக தேர்தல் மேலாண்மை செயலாளர் ஆவேச உரை!
ஈரோடு விஜயமங்கலத்தில் நடைபெற்று வரும் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) பிரம்மாண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் ஆற்றிய உரை, திமுக அரசை நிலைகுலையச் செய்யும் வகையில் அமைந்தது. மேடைக்கு வந்த ஆதவ் அர்ஜுனா, ஈரோடு மண்ணின் மைந்தர்களான தீரன் சின்னமலை மற்றும் மாவீரன் பொல்லான் ஆகியோரை நினைவு கூர்ந்து தனது உரையைத் தொடங்கினார். "அண்ணன் செங்கோட்டையன் அவர்கள் வந்த பிறகு, ஒரே வருடத்தில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை தவெக-வுக்கு உறுதியாகிவிட்டது" என்று அவர் முழங்கியபோது மைதானமே அதிர்ந்தது.
"இளம் பெரியாரா? ஸ்பெல்லிங் தெரியுமா?" சமீபத்தில் திமுக நடத்திய இளைஞர் அணி மாநாட்டைச் சாடிய ஆதவ் அர்ஜுனா, "இளைஞர் அணி மாநாடு என்கிறார்கள், ஆனால் அங்கு இளைஞர்களே இல்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முதலமைச்சரும் அவர் மகனும்தான் இளைஞர்களாம். மேடையில் எழுதி வைத்ததைப் படிக்கத் தெரியாத உங்கள் மகனுக்கு 'இளம் பெரியார்' என்று பட்டம் சூட்டுகிறீர்களே, பெரியாரின் வரலாறு உங்களுக்குத் தெரியுமா? பெரியார் என்ற வார்த்தைக்கு ஸ்பெல்லிங் சொல்லத் தெரியுமா?" என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். 70 ஆண்டுகாலப் பெரியாரின் உழைப்பைச் சிதைக்கும் வகையில் இப்படிப்பட்ட பட்டங்களைச் சூட்டுவது பெரியாரை அவமானப்படுத்தும் செயல் என்றும், இதனைத் திராவிடக் கழகம் வேடிக்கை பார்ப்பது ஏன் என்றும் அவர் ஆதங்கத்துடன் பதிவு செய்தார்.
"ஒரே பெரியார்... ஒரே அம்பேத்கர்!" தலைவர்களைக் கொச்சைப்படுத்துவதை தவெக அனுமதிக்காது என்று எச்சரித்த அவர், "தமிழகத்தைப் பொறுத்தவரை இங்கு ஒரே பெரியார், ஒரே அம்பேத்கர், ஒரே காமராஜர்தான். இந்தத் தலைவர்களை அசிங்கப்படுத்தினால் தமிழக வெற்றி கழகம் மிகப்பெரிய போராட்டத்தை உருவாக்கும். 5 ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவில் சமூக நீதி என்றால் என்ன என்று கேள்வி கேட்ட உங்கள் மகன், இன்று இளம் பெரியார் ஆகிவிட்டாரா?" என்று வஞ்சப்புகழ்ச்சி செய்தார். மேலும், 2026-ல் தொடங்கி 2031, 2036 எனத் தவெக-வின் பயணம் தடையின்றித் தொடரும் என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
"மக்களைத் துரத்தும் தேர்தல் 2026" ஈரோடு மக்களின் துயரங்களுக்குத் தற்போதைய ஆட்சியாளர்களின் ஊழலே காரணம் என்று குற்றம் சாட்டிய ஆதவ் அர்ஜுனா, "இங்குள்ள அமைச்சர்கள் டாஸ்மாக்கை நடத்துவதையே பெரிய சாதனையாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் சக்தியாலும், பெண்கள் சக்தியாலும் இந்த ஆட்சியாளர்களைத் துரத்தக்கூடிய தேர்தலாக 2026 அமையும். தலைவர் விஜய்யை மக்களிடமிருந்து பிரிக்க நீங்கள் சூழ்ச்சி செய்தீர்கள்; ஆனால் இந்த மக்கள் எழுச்சி உங்கள் சூழ்ச்சியை முறியடித்துவிட்டது. தலைவர் விஜய்யின் பேச்சைக் கேட்க ஒட்டுமொத்த தமிழகமும் தயாராக இருக்கிறது" என்று கூறித் தனது உரையை முடித்தார். ஆதவ் அர்ஜுனாவின் இந்த அனல் பறக்கும் பேச்சு, தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
