"தனிப்பட்ட முறையில் பேச எனக்கும் வரும், ஆனால் வேண்டாம் என விட்டு வைத்துள்ளேன்!" - திமுக விளாசிய விஜய்!
தமிழக அரசியலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) ஈரோடு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று தனது அனல் பறக்கும் உரையை நிகழ்த்தினார். முன்னதாக, கோவை விமான நிலையத்திலிருந்து கார் மூலம் விஜயமங்கலம் வந்த அவருக்கு, லட்சக்கணக்கான தொண்டர்கள் மஞ்சள் நீரைத் தெளித்தும், பூக்களைத் தூவியும் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். மேடைக்கு வந்த விஜய், "மஞ்சள் என்றாலே ஒரு 'வைப்' (Vibe) தான்; மங்களகரமான காரியங்களைத் தொடங்கும் மஞ்சள் விளையும் இந்த ஈரோடு மண்ணில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி" என்று கூறி தனது உரையைத் தொடங்கினார்.
"வாய் வடை சுடும் திமுக!" தனது பாணியில் ஒரு குட்டிக்கதையுடன் உரையைத் தொடங்கிய விஜய், திமுக-வின் தேர்தல் வாக்குறுதி மீறல்களைக் கடுமையாகச் சாடினார். "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் சொந்த வீடு, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை எனச் சொன்னோம். உடனே ஆளுங்கட்சியில் இருப்பவர்கள், 'நாங்கள் தான் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டோமே' என்கிறார்கள். நான் கேட்கிறேன், இங்கே வாடகை வீட்டில் இருப்பவர்கள் யாரும் இல்லையா? எல்லோருக்கும் சொந்த வீடு கிடைத்துவிட்டதா?" என்று அவர் கேட்டபோது, மைதானத்திலிருந்த மக்கள் "இல்லை" என ஆவேசமாக முழங்கினர். "வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வாயிலேயே வடை சுடுவதற்கு நாங்கள் ஒன்றும் திமுக அல்ல" என்று அவர் கிண்டலாகச் சாடினார்.
"கல்வி நாடகமும், சட்டம் ஒழுங்கு சீர்கேடும்" கல்வித்துறையில் தமிழகம் சிறந்து விளங்குவதாக திமுக நடத்தும் 'டிராமா'வையும் விஜய் அம்பலப்படுத்தினார். "பள்ளிகளில் இடைநிற்றல் (Drop-outs) யாருடைய ஆட்சியில் அதிகம்? சுமார் 207 அரசுப் பள்ளிகளை மூடிவிட்டு, கல்வியில் சிறந்த தமிழ்நாடு எனப் பேசுவது என்ன நியாயம்? லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவோம் என்று கூறிவிட்டு, இதுவரை ஒரு லட்சம் இடங்களையாவது நிரப்பியது உண்டா?" என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார். மேலும், தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதையும், சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதையும் சுட்டிக்காட்டிய அவர், "நமது ஆட்சியில் சட்டம் ஒழுங்கில் துளியும் சமரசம் இருக்காது" என்று உறுதிபடத் தெரிவித்தார்.
"அநாகரிக அரசியலுக்கு விடைகொடுப்போம்!" தன்னைத் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பவர்களுக்குப் பதிலளித்த விஜய், "உங்களைப் போலத் தரக்குறைவாகவும், அசிங்கமாகவும் பேசுவது தான் அரசியல் என்றால், அந்த அரசியல் நமக்கு வராது. வராது என்றால் தெரியாது என்று அர்த்தமில்லை; உங்களை விட எனக்கு அது நன்றாகவே வரும். ஆனால் வேண்டாம் என்று விட்டு வைத்துள்ளேன். அப்படிப் பேசினால் உங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்?" என்று அதிரடியாகக் கேட்டார். பெரியார் மற்றும் அண்ணாவின் பெயர்களைப் பயன்படுத்திப் பிழைப்பு நடத்துபவர்களைச் சாடிய அவர், "பெரியார் இந்தத் தமிழ்நாட்டைத் திருப்பிப் போட்ட நெம்புகோல்; அவரது பெயரைச் சொல்லிக் கொண்டு கொள்ளையடிக்காதீர்கள்" என்று வார்னிங் கொடுத்தார். விஜய்யின் இந்தத் தீவிரமான அரசியல் பேச்சு, 2026 தேர்தலுக்கான ஒரு மாபெரும் போர் முழக்கமாகவே பார்க்கப்படுகிறது.
