லஞ்சம் பெற்றதாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் பிடி இறுகியது; ஜனவரி 11-க்கு விசாரணை ஒத்திவைப்பு!
சீனப் பிரஜைகளுக்கு முறைகேடாக விசா பெற்றுத் தந்த விவகாரத்தில், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது ஆடிட்டர் பாஸ்கர் ராமன் ஆகியோர் மீது டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் இன்று அதிகாரப்பூர்வமாகக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது. இந்த ‘பகீர்’ நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள டி.எஸ்.பி.எல். (TSPL) நிறுவனத்தின் அனல் மின் நிலையத் திட்டப் பணிகளை மேற்கொள்ளச் சீனாவைச் சேர்ந்த ஷாங்டாங் எலக்ட்ரிக் பவர் கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது. இந்தப் பணிகளுக்காகச் சீனாவிலிருந்து வரும் 263 ஊழியர்களுக்கு, உள்துறை அமைச்சகத்தின் விதிகளைப் புறந்தள்ளி முறைகேடாக விசா பெற்றுத் தருவதற்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் கார்த்தி சிதம்பரம் மீது குற்றம் சாட்டப்பட்டது. கடந்த 2022-ஆம் ஆண்டு இது தொடர்பாக சிபிஐ (CBI) ‘கறார்’ வழக்குப் பதிவு செய்து, கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் விரிவான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.
இந்த வழக்கு இன்று ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது ஆடிட்டர் பாஸ்கர் ராமன் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட இந்தக் குற்றச்சாட்டுகளால் கார்த்தி சிதம்பரத்திற்குச் சட்டச் சிக்கல் அதிகரித்துள்ளது. இதனையடுத்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நீதிமன்றம் ஜனவரி 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. ‘ஆட்சியில் இருந்தபோது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திச் சீனர்களுக்கு விசா பெற்றுத் தந்ததாக’ சிபிஐ முன்வைக்கும் வாதங்கள், வரும் நாட்களில் அனல் பறக்கும் விவாதங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
