பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் வருகை: கே.பி. முனுசாமி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசனுடன் இபிஎஸ் தீவிர ஆலோசனை!
தமிழக அரசியலில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லம் இன்று முக்கிய அரசியல் நகர்வுகளின் மையப்புள்ளியாக மாறியுள்ளது. பாஜக-வின் தேர்தல் பொறுப்பாளர்கள் தமிழகத்திற்கு விசிட் அடித்துள்ள அதே நேரத்தில், அதிமுக-வின் முக்கிய நிர்வாகிகள் இபிஎஸ் இல்லத்தில் அணிவகுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
இன்று காலை எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி வருகை தந்தார். ஆனால், அவர் இபிஎஸ்-ஐ சந்திக்காமலேயே வந்த வேகத்தில் காரில் ஏறிப் புறப்பட்டுச் சென்றது அதிமுக தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, அதிமுக-வின் மூத்த தலைவர்களான கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் அடுத்தடுத்து இபிஎஸ் இல்லத்திற்கு வருகை தந்தனர். தற்போது மூடிய அறைக்குள் மிக முக்கியமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
பாஜக மேலிடப் பொறுப்பாளர்கள் தமிழகம் வந்துள்ள சூழலில், அதிமுக-வின் இந்தத் திடீர் ஆலோசனைக் கூட்டம் கூட்டணி கணக்குகளை மையப்படுத்தியதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக, தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதிக்கப்படுவதாகத் தகவல்கள் கசிகின்றன. தங்கமணி சந்திக்காமல் சென்றது உட்கட்சிப் பூசலா அல்லது ரகசிய விவகாரமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் அதிமுக தரப்பிலிருந்து வெளியாகப்போகும் அறிவிப்பு தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.jpg)