வேளாண் உற்பத்தியில் தமிழகம் சாதனை; 100 நாள் வேலைத் திட்டத்தைக் குலைக்கும் பாஜக-வுக்கு எதிராக நாளை கண்டன ஆர்ப்பாட்டம்!
உலகத்தவரின் பசிப்பிணி போக்கும் உன்னதத் தொழிலைச் செய்து வரும் வேளாண் பெருங்குடி மக்களுக்குத் தேசிய விவசாயிகள் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உழவர் நலனைப் பாதுகாப்பதில் திராவிட மாடல் அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டதோடு, ஒன்றிய அரசின் போக்கிற்குத் தனது ‘கறார்’ கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார்.
முதலமைச்சர் விடுத்துள்ள செய்தியில், "வேளாண் துறைக்கு எனத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தது முதல், உழவன் செயலி, கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மற்றும் தடையற்ற இலவச மின்சார இணைப்புகள் என நமது அரசு எடுத்து வரும் தொடர் முயற்சிகளால் தமிழகம் வேளாண் உற்பத்தியில் புதிய சாதனைகளைப் புரிந்து வருகிறது. உழவர் வாழ்வு செழிக்கவும், அவர்களின் வாழ்வாதாரம் உயரவும் வேளாண் வணிகத் திருவிழாக்கள் மற்றும் கண்காட்சிகள் மூலம் புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளோம்" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், ஒன்றிய பாஜக அரசின் மீதான தனது விமர்சனத்தையும் அவர் முன்வைத்துள்ளார். "உழவர்களை வஞ்சிக்கும் விதமாகச் செயல்படும் ஒன்றிய அரசுக்கு எதிராகப் போராடி, தமிழக விவசாயிகளின் நலனைப் பாதுகாத்து வருகிறோம். குறிப்பாக, #MGNREGA திட்டத்தைச் சிதைத்து, விவசாயக் கூலித் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் ஒன்றிய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து நாளை தமிழகம் தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன. உழவர் நலனைக் காப்பதில் திராவிட மாடல் அரசின் சாதனைகள் என்றும் தொய்வின்றித் தொடரும்" என்று தனது ‘பகீர்’ அரசியல் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். தேசிய விவசாயிகள் தினத்தில் முதலமைச்சரின் இந்த அறிக்கை, வேளாண் குடிமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
