சந்தனக்கூடு விழாவிற்கு அனுமதி வழங்கியதால் ஒரு பிரிவினர் எதிர்ப்பு; கோட்டைத் தெருவில் காவல்துறையினருடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!
மதுரை திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சிக்கந்தர் தர்கா மற்றும் தீபத்தூண் தொடர்பான விவகாரத்தில், தற்போது மீண்டும் பதற்றமானச் சூழல் உருவாகியுள்ளது. வரும் 21-ஆம் தேதி மலை மேல் உள்ள தர்காவில் சந்தனக்கூடு விழாவிற்காகக் கொடியேற்ற அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இன்று அங்குச் சென்ற நபர்களால் பொதுமக்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்ததால் பழனியாண்டவர் கோவில் பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
திருப்பரங்குன்றம் மலை மேல் தீபம் ஏற்றுவது தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், நாளை நடைபெறவுள்ள சந்தனக்கூடு விழாவிற்கான கொடியேற்ற நிகழ்விற்குத் தமிழக அரசு சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் ஒரு தரப்பினரை மட்டும் அழைத்துவிட்டு, தங்களை அழைக்கவில்லையென மற்றொரு தரப்பினர் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில், இன்று காலை மலை மேல் உள்ள கள்ளத்தி மரத்தில் கட்டப்பட்டிருந்த கொடியை இறக்கி வேலை செய்வதற்காக நான்கு இஸ்லாமியர்கள் மலைக்குச் சென்றனர். இதைக் கண்ட கோட்டைத் தெருப் பொதுமக்கள், அவர்களைத் தடுத்து நிறுத்திக் காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் சசி பிரியா மற்றும் ஆய்வாளர் ராஜதுரை ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, "நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது ஒரு தரப்பை மட்டும் எப்படி அனுமதிக்கலாம்? யாரையும் மலை மேல் செல்ல விடக்கூடாது, மீறிச் சென்றால் எங்களையும் அனுமதிக்க வேண்டும்" எனப் பொதுமக்கள் ஆவேசமாக முறையிட்டனர். இதனால் பழனியாண்டவர் கோவில் மற்றும் தர்கா செல்லும் பாதைகளில் போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நாளைக் கொடியேற்ற விழா நடைபெற உள்ள நிலையில், இந்தப் பதற்றம் எங்குச் சென்று முடியுமோ என்ற அச்சத்தில் உள்ளூர் மக்கள் உள்ளனர்.
