கோவை மாநகரில் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் இரண்டு வயது வரையிலான குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், 'அமுதம்' எனும் இலவசப் பசும்பால் திட்டம் தற்போது களத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வழிகாட்டுதலில் இயங்கும் 'மக்கள் சேவை மையம், இந்த சமூகப் பங்களிப்புத் திட்டத்தை முன் நிறுத்திச் செயல்படுத்தி வருகிறது.
பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை நீக்கி, அவர்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்ற உன்னத நோக்கில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
மக்களின் அடிப்படைத் தேவைகளை அறிந்து, அவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஒரு முன்னோடி முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
இந்த 'அமுதம்' பால் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தாய்மார்கள், அந்தந்தப் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் தங்களது பெயர்களைப் பதிவு செய்து, குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்களை காண்பித்து தினமும் தலா கால் லிட்டர் (1/4 லிட்டர்) தரமான பசும்பாலை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம் என்ற சுலபமான நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் ஏழை - எளிய குடும்பங்களைச் சேர்ந்த தாய்மார்கள் பெரும் நிம்மதி அடைந்து உள்ளதோடு, குழந்தைகளின் சீரான வளர்ச்சியை உறுதிப்படுத்தும் இந்த திட்டம் கோவை மக்கள் இடையே மிகுந்த பாராட்டைப் பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
in
அரசியல்
