புயல் காரணமாக அவகாசம் நீட்டிப்பு இன்றுடன் நிறைவு: புதிய வாக்காளர் சாவடிகள் உருவாக்கம்; மொத்த எண்ணிக்கை 75,035 ஆக உயர்வு!
இந்தியத் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்த எஸ்ஐஆர் (SIR) எனப்படும் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் இன்று டிசம்பர் 11, 2025 அன்றுடன் முடிவடைகிறது. கடந்த நவம்பர் 4, 2025 முதல் துவங்கி நடைபெற்று வந்த இந்தப் பணிகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையிலும், சிரமங்களுக்கிடையே பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் டிசம்பர் 4 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தித்வா (Ditwah) புயல் காரணமாகத் தமிழகம் முழுவதும் கனமழை பெய்ததால் ஏற்பட்ட சிரமத்தைக் கருத்தில் கொண்டு, இந்த கால அவகாசம் இன்று வரை (டிசம்பர் 11) நீட்டிக்கப்பட்டிருந்தது.
தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரப்படி, டிசம்பர் 10, 2025 புதன்கிழமை வரை 6,40,10,380 படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதில், 6,40,83,414 படிவங்கள் வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்டுச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பெயர் இடம் பெயர்ந்தவர்கள், முகவரி மாறியவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகள் உள்ளவர்கள், உயிரிழந்தவர்கள் உள்ளிட்டோருக்கான படிவங்கள் வழங்கப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து, வரும் டிசம்பர் 16, 2025 அன்று இறுதி வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. இந்தப் பட்டியலில் சுமார் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கலாம் என வட்டாரத் தகவல் வெளியாகியுள்ளது. சமர்ப்பிப்பு முடிவடைந்த நிலையில், பெயர் விடுபட்டவர்கள் டிசம்பர் 16, 2025 முதல் ஜனவரி 15, 2026 வரை உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து புதிதாகத் தங்களை இணைத்துக்கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், 2026ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 18 வயது பூர்த்தி அடைபவர்கள் படிவம் 6-ஐப் பயன்படுத்த வேண்டும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் படிவம் 6ஏ, தங்கள் பெயர் சேர்க்க மற்றும் நீக்குவதற்கான ஆட்சேபணைகளைத் தெரிவிப்போர் படிவம் 7, முகவரி மாறியவர்கள் படிவம் 8 ஆகியவற்றைப் பெற்றுப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இந்தச் சமர்ப்பிப்புகள் தேர்தல் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு, இறுதியாக பிப்ரவரி 14, 2026 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றொரு முக்கிய நிர்வாக மாற்றமாக, தமிழகத்தில் 1,200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என வாக்குச்சாவடிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாகப் புதிதாக 6,648 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்ட நிலையில், மேலும் 80 வாக்குச்சாவடிகள் இணைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, தமிழ்நாட்டில் மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 75,035 ஆக உயர்ந்துள்ளது.
