விஜய் 'தீய சக்தி' எனச் சொல்வது சரிதான்; பீகார் தேர்தல் காற்று தமிழகத்திலும் வீசும் எனப் பாஜக மாநிலத் தலைவர் ஆருடம்!
தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டுள்ள ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பிரச்சார யாத்திரை இன்று திருச்சியின் புத்தூர் நால்ரோடு பகுதியைச் சென்றடைந்தது. யாத்திரையை நிறைவு செய்த பின், திருச்சி பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சத்துணவுப் பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் தங்களைப் பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், திமுக அரசு மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்துப் பல்வேறு அதிரடி கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். "தமிழக முதல்வர் நெல்லையில் திறந்து வைக்கும் மருத்துவமனைகளில் 60% நிதிப் பங்களிப்பு மத்திய அரசுடையது. அந்தத் திறப்பு விழாக்களுக்கு மத்திய அமைச்சர்களை அழைப்பதுதான் மரபு. 100 நாள் வேலைத் திட்டத்தில் 150 நாட்கள் வேலை தருவோம் என்று வாக்குறுதி அளித்த திமுக, அதைச் செய்யவில்லை. ஆனால், பிரதமர் மோடி 125 நாட்கள் வேலைக்கான உத்தரவாதத்தைத் தந்துள்ளார். காந்தி பெயரை நீக்குகிறார்கள் எனச் சொல்லும் முதல்வர், தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்லாத போலி மதச்சார்பின்மையைக் கடைப்பிடிப்பதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்" எனச் சாடினார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "விஜய்யின் நோக்கம் திமுக இருக்கக் கூடாது என்பதுதான். அதனால்தான் அவர் திமுகவைத் தீய சக்தி என்கிறார். தேர்தலில் இருமுனைப் போட்டி இருந்தால் தான் திமுகவை வீழ்த்த முடியும் என நினைத்து விஜய் செயல்பட்டால் அது நாட்டுக்கு நல்லது. திமுக எதிர்ப்பு வாக்குகள் பிரிவது எங்களைப் பாதிக்காது. 2021-ல் நாங்கள் பல இடங்களில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றியை இழந்தோம். இப்போது மகாராஷ்டிரா மற்றும் பீகார் தேர்தல்களில் பாஜக பெற்றுள்ள பிரம்மாண்ட வெற்றி, தமிழகத்திலும் எதிரொலிக்கும். பீகாரில் வீசும் காற்று நிச்சயம் தமிழகத்திற்கும் வந்து சேரும்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், ஊழல் புகாரில் உள்ள அமைச்சர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
.jpg)