66 லட்சம் வாக்காளர்கள் முகவரி மாயம் என்பதில் சந்தேகம்; 'ஜனநாயக விரோதி' என விஜய்க்குக் கடும் கண்டனம்!
மயிலாடுதுறைக்கு வருகை தந்த மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிமுன் அன்சாரி, செய்தியாளர்களைச் சந்தித்தபோது தமிழகத்தின் தற்போதைய அரசியல் நகர்வுகள் குறித்துப் பல அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாகப் பாஜகவின் 'சதுரங்க' வேட்டை மற்றும் நடிகர் விஜய்யின் அரசியல் நிலைப்பாடு குறித்து அவர் முன்வைத்த விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய தமிமுன் அன்சாரி, "பாஜக இன்று அதிமுகவுடன் உறவாடிக் கொண்டே அந்தக் கட்சியைச் சிதைக்கும் வேலையைச் செய்கிறது. விஜயை வளரவிட்டு அதன் மூலம் அதிமுகவை அழித்து, பிறகு விஜயைக் கட்டுப்படுத்தலாம் என்பதுதான் பாஜகவின் திட்டம். ஆனால், தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் வல்லமை திமுக தலைமையிலான கூட்டணிக்கு மட்டுமே உண்டு" எனத் தெரிவித்தார். மேலும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யைச் சாடிய அவர், "கட்சி தொடங்கி இத்தனை நாட்களாகியும் பத்திரிகையாளர்களைச் சந்திக்க மறுப்பது ஒரு கட்சித் தலைவருக்கு அழகா? திமுகவை விமர்சிக்கும் விஜய், காந்தியின் பெயரை 100 நாள் திட்டத்திலிருந்து நீக்கிய பாஜகவை ஏன் விமர்சிக்கவில்லை? விஜய் இன்னும் மக்கள் மனநிலையையும் அரசியல் களத்தையும் முழுமையாகப் படிக்க வேண்டும்" என்று கூறினார்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) குறித்துப் பேசிய அவர், 66 லட்சம் பேருக்குச் சரியான முகவரி இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறியிருப்பது பெரும் சந்தேகத்தை எழுப்புவதாகக் குற்றம் சாட்டினார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வெளியூர் நபர்களே பதற்றத்தை உண்டாக்க முயல்வதாகவும், தமிழகத்தை ஒருபோதும் குஜராத்தாக மாற்ற முடியாது என்றும் அவர் எச்சரித்தார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான 'இந்தியா' கூட்டணியிலேயே தமது கட்சி போட்டியிடும் என்பதை உறுதிப்படுத்திய அவர், தொழில் வளர்ச்சி மற்றும் சமூக நலத்திட்டங்களில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்வதே திராவிட மாடல் ஆட்சியின் சாதனை எனப் புகழாரம் சூட்டினார்.
