திருப்பரங்குன்றத்தில் சதி செய்யும் பாஜக, இந்து முன்னணி; 16 தொகுதிகள் ஒதுக்கக் கோரி முதலமைச்சருக்குக் கோரிக்கை!
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இஸ்லாமியர்களின் வாக்குகள் ஒட்டுமொத்தமாக திமுகவிற்கே கிடைக்கும் என்றும், தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட எந்தப் புதிய கட்சிக்கும் சிறுபான்மையினர் ஆதரவு இல்லை என்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் இன்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நடைபெற்ற கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசியலின் தற்போதைய 'ஹாட்' டாபிக்குகளைத் தொட்டுப் பேசினார். "தமிழகத்தில் சுமார் 97 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதில் இடம் பெயர்ந்தவர்களை நீக்கியது அவர்களின் குடியுரிமையைப் பறிக்கும் செயலாகத் தெரிகிறது. அவர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்கத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினார். மேலும், 2026 தேர்தலில் திமுக கூட்டணியில் 16 தொகுதிகளை இஸ்லாமிய வேட்பாளர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும், அதில் 5 தொகுதிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் குறித்துப் பேசிய அவர், "அங்கு இந்து மற்றும் இஸ்லாமிய மக்கள் மிகவும் ஒற்றுமையாகத்தான் வாழ்கிறார்கள். ஆனால், பாஜக மற்றும் இந்து முன்னணி போன்ற கட்சிகள் வேண்டுமென்றே சதி வேலைகளில் ஈடுபட்டு அமைதியைக் குலைக்கப் பார்க்கின்றன. தவெக தலைவர் விஜய் இந்த விவகாரத்தில் கருத்துச் சொல்லாதது அவரது விருப்பம். ஆனால், எங்களைப் பொறுத்தவரை 8,000-க்கும் மேற்பட்ட மசூதிகளைக் கொண்டுள்ள மஹல்லா ஜமாத்துகள் எடுக்கும் முடிவே இறுதியானது. ஜமாத்துகள் திமுகவையே ஆதரிக்கும் என்பதால், சிறுபான்மையினர் ஓட்டுகள் சிதற வாய்ப்பில்லை" என்று 'கறார்' ஆகக் குறிப்பிட்டார். புதுச்சேரியிலும் இந்தியா கூட்டணியில் நீடிப்பதை உறுதி செய்த அவர், வில்லியனூர் அல்லது காரைக்கால் உள்ளிட்ட நான்கு தொகுதிகளில் ஏதேனும் ஒன்றை தங்களுக்கு ஒதுக்க வலியுறுத்துவோம் என்றும் பேட்டியின் போது தெரிவித்தார்.
